மாணவர் மார்பில் அயர்ன் பாக்ஸ் சூடு, உருட்டுக்கட்டையால் தாக்குதல்: ஆந்திரா கல்லூரி விடுதியில் நடந்த கொடூரம்

மாணவர் மார்பில் அயர்ன் பாக்ஸ் சூடு, உருட்டுக்கட்டையால் தாக்குதல்: ஆந்திரா கல்லூரி விடுதியில் நடந்த கொடூரம்

ஆந்திராவில் பொறியியல் கல்லூரி மாணவரை சக மாணவர்கள் அயர்ன் பாக்ஸ் வைத்து மார்பில் சூடு வைத்தும், உருட்டுக் கட்டைகளால் தாக்கும் பதற வைக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கல்லூரி விடுதி அறையில் நான்கு மாணவர்கள் ஒரு மாணவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அடிபடும் மாணவர் கெஞ்சி மன்னிப்பு கேட்டாலும், விடாது அவரைத் தொடர்ந்து தாக்குகின்றனர். அத்துடன் மாணவரின் சட்டையைக் கிழித்ததுடன், அதை கழற்றச் சொல்ல அவர்கள் அடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர், தாக்கிய மாணவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவர் படுகாயங்களுடன் பீமாவரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அயர்ன் பாக்ஸ் வைத்து சுட்டதால் அவர் மார்பு பகுதியில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உருட்டுக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப்புகளை வைத்து அவரைத் தாக்கியதில் கை, கால் பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நான்கு மாணவர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விடுதியில் சம்பவம் நடந்ததையடுத்து கல்லூரி முதல்வர், நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பதிவு செய்தது யார், வெளியிட்டது யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகிங்கிற்காக இந்த தாக்குதல் நடந்ததா வேறு பிரச்சினையால் இந்த தாக்குதல் நடந்ததா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in