
குஜராத் கடற்கரையில் ஈரானிய படகிலிருந்து ரூ.425 கோடி மதிப்பிலான 61 கிலோ போதைப்பொருளை அம்மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு கைப்பற்றியது. உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படையால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் உளவுத்துறை அளித்த ரகசிய தகவல்களைத் தொடர்ந்து, நேற்று அரபிக்கடலில் ரோந்து செல்வதற்காக கடலோரக் காவல்படை, ஐசிஜிஎஸ் மீரா பெஹ்ன் மற்றும் ஐசிஜிஎஸ் அபீக் ஆகிய இரண்டு வேகமான ரோந்துக் கப்பல்களை அனுப்பியது. நேற்று இரவு, ஓகா கடற்கரையிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் இந்திய கடல் பகுதியில் கடலோரக் பாதுகாப்புப் படையைக் கண்டதும் ஒரு படகு தப்பிச் செல்ல முயன்றது.
அந்தப் படகு இந்திய கடலோர காவல்படையின் கப்பல்களால் துரத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் விசாரணையில் அது ஈரானிய நாட்டு படகு என கண்டறியப்பட்டது. அந்த படகில் ஈரான் நாட்டை சேர்ந்த 5 பேர் இருந்ததாகவும், கப்பலில் சோதனை நடத்திய போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஓகாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.
2022 ம் ஆண்டில் சுமார் ரூ 1,940 கோடி மதிப்புள்ள 388 கிலோ போதைப் பொருட்களை கடலோரக் காவல்படையுடன் சேர்ந்து கைப்பற்றியதாக குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.