மேலும் இருவருக்கு தூக்கு: வலுக்கும் ஈரான் ஹிஜாப் போராட்டம்
ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை அடக்கும் வகையில் அந்நாட்டு போராட்டக்காரர்களை தூக்கிலிடும் படலத்தை தொடங்கியுள்ளது.
கடந்த வருடம் செப்.16 அன்று மாஷா அமினி என்ற 22 வயது பெண், முறையாக ஹிஜாப் அணியாதது என்ற புகாரின் கீழ் கலாச்சார காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்தும், ஹிஜாப் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈரானில் பெண்கள் போராட ஆரம்பித்தனர். இவர்களுக்கு சர்வதேச அளவில் பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை இயக்கங்கள், ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகள், அடக்குமுறைகளை கையாண்டும் அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்க முடியவில்லை. இதனால் சிறை தண்டனை முதல் தூக்கிலிடுவது வரை போராட்டக்காரர்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் அதிகாரபூர்வமற்ற கணக்கில் கணிசமான போராட்டக்காரர்கள் அங்கே கொல்லப்பட்டு வருகின்றனர். ஒருசில கடுமையான குற்றச்சாட்டுகளில் கொல்லப்படுவோர் குறித்த தகவல்களை அரசே வெளியிடவும் செய்கிறது. இதன் மூலம் போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது.
இந்த வரிசையில் நேற்றைய தினம் (ஜன.7) போராட்டக்காரர்களில் இருவரை ஈரான் அரசு சார்பில் தூக்கிலடப்பட்டார்கள். போராட்டக்காரர்கள் தாக்கியதில் பாதுகப்பு படை வீரர் ஒருவர் இறந்ததான குற்றச்சாட்டின் கீழ், முகமது மெஹ்தி கராமி, சயீத் முகமது ஹூசைனி என்ற இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 70 சிறுவர்கள் உட்பட 517 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் 19,262 போராட்டக்காரர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.