இஷ்ரத் ஜஹான் வழக்கு: ஓய்வுபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஐபிஎஸ் அதிகாரி டிஸ்மிஸ்!

சதீஷ் சந்திர வர்மா
சதீஷ் சந்திர வர்மா

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்துவந்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர வர்மா, ஓய்வுபெற ஒரு மாதம் இருக்கும் நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

2004 ஜூன் 15-ல் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் நடந்த என்கவுன்டரில் இஷ்ரத் ஜஹான்(19), ஜாவேத் ஷேக் (எ) பிரணேஷ் பிள்ளை, அம்ஜதலி அக்பரலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அவர்கள் என இந்த என்கவுன்டரில் ஈடுபட்ட அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸாரும், துணை புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் தெரிவித்தனர்.

அது போலி என்கவுன்டர் எனப் புகார்கள் எழுந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. அதில் சதீஷ் சந்திர வர்மா அங்கம் வகித்தார். இந்த விசாரணை 2011-ல் முடிவுற்றது. அதன்படி அந்த என்கவுன்டர் போலியானது என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த சிபிஐ குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து, 2013-ல் குஜராத் ஐபிஎஸ் அதிகாரியும், அகமதாபாத் குற்றப்பிரிவு உதவி ஆணையருமான ஜி.எல்.சிங்கால் உள்ளிட்ட போலீஸார் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர் 2022 ஆகஸ்ட் மாதம் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. செப்டம்பர் 30-ம் தேதி அவர் பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்த நிலையில், ஒரு மாதம் முன்னதாகவே ஆகஸ்ட் 30-ல் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெறுவதற்கு முன்பே பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மீதான துறை ரீதியான விசாரணையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக 2022 செப்டம்பர் 6-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்தது. குறிப்பாக, இந்தியாவின் சர்வதேச உறவுகளைச் சீர்குலைத்த ஊடகங்களிடம் அவர் பேட்டியளித்ததுதான் இந்நடவடிக்கைக்குக் காரணம் என உள் துறை அமைச்சகம் கூறியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை உறுதி செய்தது. அதேசமயம், இவ்விஷயத்தில் அவர் சட்டபூர்வமாக அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்லவும் அனுமதி அளித்தது.

இதையடுத்து, தனது பணிநீக்க உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in