ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர்: உயர் நீதிமன்ற நீதிபதி பாராட்டு

 டேவிட்சன் தேவாசீர்வாதம்
டேவிட்சன் தேவாசீர்வாதம்

ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்து உத்தரவில், மதுரை, திருச்சியில் 1.2.2019 முதல் 30.6.2019 வரை போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நபர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டது. இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை பெரியளவில் எழுப்பியதை நாளிதழில் படித்தேன். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், போலி பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் உடனடியாக கவனத்தில் எடுத்து விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும்.

மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் மட்டும் 54 போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காலக் கட்டத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர் என நான் சான்று அளிக்கிறேன். அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகிறேன். அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார். அவர் இல்லை என்றால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது" என்று உத்தரவில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in