`காத்திருக்கும் எங்களை விட்டுவிட்டு அவர்களை பணியில் நியமிப்பது எந்த வகையில் நியாயம்'

தமிழக அரசுக்கு இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் மருத்துவ சங்கம் கேள்வி
`காத்திருக்கும் எங்களை விட்டுவிட்டு அவர்களை பணியில் நியமிப்பது எந்த வகையில் நியாயம்'

`தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் BNYS எனும் ஐந்தரை ஆண்டு காலம் பட்டபடிப்புகளை முடித்தவர்களை மட்டுமே யோகா பயிற்சியாளர் என்ற தற்காலிக பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்' என இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் மருத்துவ சங்கம் (INYGMA) கோரிக்கை விடுத்துள்ளனது.

இது தொடர்பாக இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் மருத்துவ சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `BNYS Bachelor of Naturopathy and Yogic Sciences எனும் ஐந்தரை ஆண்டுகள் படிக்கப்படும் மருத்துவ படிப்பு உள்ளது. இந்த படிப்பை கொண்டு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். இந்த படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருந்து வரும் நிலையில் பலர் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த படிப்பின் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏராளமானோர் இந்த பட்டப்படிப்பை படித்து முடித்து வெளியே வருகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்க யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படித்த மருத்துவர்களை பணியமர்த்த மத்திய மற்றும் மாநில அரசுக்கு இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் மருத்துவ சங்கம் (INYGMA) தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதன் பலனாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சியாளர் எனும் தற்காலிக மற்றும் பகுதி நேரம் மட்டுமே பணியாற்றக் கூடிய பதவியானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இதனால் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலில் இளங்கலை பட்டம் படித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இதுவரை இந்த பட்டப்படிப்புகளை படித்துவிட்டு அரசின் அழைப்புக்காக காத்திருக்கும் நபர்கள் அழைக்கப்படவில்லை.

மேலும் இந்த சங்கத்தை சேர்ந்த பெயர் வெளியிடாத நிர்வாகிகள் சிலர் கூறுகையில் நாகை, கும்பகோணம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் யோகா பயிற்சியாளர் பணிக்கு 3 மாதம் 6 மாதம் சான்றிதழ் படிப்பு படித்தவர்களை நியமித்து வருவதை அறிகிறோம். ஐந்தரை ஆண்டுகள் படித்து அதன் நுணுக்கங்களை கற்று தேர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி முடித்துவிட்டு காத்திருக்கும் எங்களை விட்டுவிட்டு சான்றிதழ் படிப்பு படித்தவர்களை நியமிப்பது எந்த வகையில் நியாயம். இதை அந்தந்த மாவட்ட டிஎஸ்எம்ஓ (DSMO) நியமிப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதை அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகள், நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள், சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள், பக்கவாதம், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை தருகிறார்கள். இவர்களுக்கு முறையாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு படித்த பட்டதாரிகள் மட்டுமே தரமான சிகிச்சை அளிக்க இயலும் இவ்வாறிருக்கும் நிலையில் சான்றிதழ் படிப்பு (certificate course) படித்தவர்களை நியமிக்கப்படுவதால் ஏதாவது தவறான வழிகாட்டல் ஏற்பட்டு நோயாளியின் உடலுறுப்புகளுக்கோ உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? எனவே மேற்கண்ட மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தால் பணியில் நியமிக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் BNYS மருத்துவ படிப்பு படித்துவிட்டு காத்திருக்கும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in