'புகாரை வாபஸ் வாங்கினால் தான் விசாரணை நடக்கும்': போலீஸ்காரரின் மிரட்டல் ஆடியோ வைரல்

'புகாரை வாபஸ் வாங்கினால் தான் விசாரணை நடக்கும்': போலீஸ்காரரின் மிரட்டல் ஆடியோ வைரல்

முதலமைச்சர் தனிப்பிரிவில் அளித்த புகார் மனுவை வாபஸ் வாங்கினால் தான் விசாரணை நடக்கும். இல்லையெனில் கிடப்பில் போடப்படும் என புகார்தாரரை செல்போனில் மிரட்டிய அண்ணா நகர் காவலரின் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கடந்த 2008-ம் ஆண்டு வெளிநாடுகளில் ஆட்களை வேலைக்கு அனுப்பும் டிராவல்ஸ் பேக்கேஜ் என்ற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டுள்ளார். சென்னை அண்ணாநகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரத்னேஸ்வரன் லண்டனில் ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதற்காக ஆறுமுகத்திடம் தவணை முறையில் 12.25 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த மோசடி தொடர்பாக ஆறுமுகம் கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா நகர் காவல் நிலையத்தில் ரத்னேஸ்வரன் மீது புகார் அளித்தார்.

இதன் பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பல ஆண்டுகளாகியும் இப்புகாரின் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆறுமுகம் சமீபத்தில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். " முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட மனுவை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் உங்களது புகார் கிடப்பில் போடப்படும்" என மிரட்டுகிறார். அந்த ஆடியோவில், " புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நீங்கள் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்திருப்பதால் விரைவாக விசாரணை நடத்தமுடியாமல் போவதாகவும், உடனடியாக அந்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுதிக் கொடுக்க வேண்டும்" என ஆறுமுகத்தை காவலர் வற்புறுத்துகிறார்.

அதற்குப் பதிலளித்த ஆறுமுகம்," வழக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டததால் தான் முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன். தற்போது விசாரணை துவக்கியுள்ளது. மனுவை வாபஸ் பெற்றால் மீண்டும் கிடப்பில் போட்டு விடுவீர்கள்" என்று கூறுகிறார். அதற்கு, " முதல்வர் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுவை வாபஸ் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும், இல்லையென்றால் கிடப்பில் போடப்படும்" என மிரட்டும் தொனியில் காவலர் பேசுகிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ குறித்து உயர் அதிகாரிகள் துறைரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in