பல கோடி ரூபாய் நிதி மோசடி: விசிக கவுன்சிலர், எல்பின் நிதி நிறுவனத்தில் அதிரடி ரெய்டு

பிரபாகரன் வீடு
பிரபாகரன் வீடு

தனியார் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி குறித்த வழக்கில் திருச்சி மாநகராட்சி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகருமான பிரபாகரன் என்பவரது வீடு, தனியார் நிதி நிறுவனம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சியை மையமாகக் கொண்டு 'எல்பின்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குநர் ரமேஷ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சு ஊடக பிரிவின் மாநில துணை செயலாளராக இருப்பதும், எல்பின் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் இன்னொரு இயக்குநராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணை செயலாளர் ராஜாவும் உள்ளார்.

இந்த தனியார் நிதி நிறுவனத்தில் (ELFIN) நடைபெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபாய் பண மோசடி தொடர்பான மக்களின் புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், இன்று திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் திருச்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரனும் தப்பவில்லை.

சேலம் மாவட்டம், பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் நிதி நிறுவனம் மற்றும் பிரபாகரன் தொடர்புடைய சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in