துணைவேந்தர் தகுதி குறித்து பேசியதால் மிரட்டப்படுகிறேன்: காமராசர் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் குமுறிய பேராசிரியர்

துணைவேந்தர் தகுதி குறித்து பேசியதால் மிரட்டப்படுகிறேன்: காமராசர் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் குமுறிய பேராசிரியர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் செனட் கூட்டம் இன்று நடந்தது. துணைவேந்தர் ஜெ.குமார் தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கல்விபேரவையில் கொண்டு வந்த தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டன.இதன் பின் விவாதம் நடைபெற்றது.

பேராசிரியர் சந்திரபோஸ்: பல்கலையில் கடந்த 2021- ஆண்டுக்குப் பிறகு பிஎச்டி வழிகாட்டுதலில் ஒரு பேராசிரியருக்கு 6 பேருக்கு மட்டும் அனுமதி என்ற விதியை மாற்றவேண்டும். இதுபோன்ற கட்டுப்பாட்டால் பிஎச்டிக்கு பதிவு செய்த மாணவர்கள் பாதிக்கின்றனர்.2006- ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை.

துணைவேந்தர்: ஆலோசிக்கப்படும்.

உதவி பேராசிரியர் கணேசன்: பல்கலையில் புதிதாக இளநிலை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது போன்று பிஏ. இந்தி, முன்னாள் ராணுவ வீரர்களை போற்றும் விதமாக பட்டயப் பாடப்பிரிவுகளை தொடங்கவேண்டும்.

துணைவேந்தர்: பரிசீலிக்கலாம்.

லேடிடோக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானாசிங்: சுயநிதி வகுப்புகள் எடுக்கும் தகுதியுள்ள உதவி பேராசிரியர்களுக்கு ஆய்வு வழிகாட்டுதலுக்கு அனுமதி வழங்கவேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக விரும்பும் பாடப்பிரிவுக்கான எண்ணிக்கையை உயர்த்தவேண்டும்.

துணைவேந்தர்: இவற்றில் யூஜிசி விதிகளையே பின்பற்ற முடியும்.

பேராசிரியர் வேளாங்கன்னி ஜோசப் : பல்கலை பதிவாளர், தேவாணையர் முக்கிய பதவிக்கான காலியிடங்களை நிரப்பவேண்டும். பல்கலை பொறுப்பு பதவிகளில் மூத்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்களை சுழற்சி முறையில் 6 மாதத்திற்கு ஒருமுறை நியமிக்கவேண்டும். பல்கலை அலுவலர்கள் மரியாதையாக நடத்தவேண்டும். மருத்துவம், வேளாண் பல்கலைகளைப் போன்று, கலை, அறிவியல் பல்கலைகளில் தகுதியுள்ள கலை பிரிவு மூத்த பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்பதற்காக சிலரால் மிரட்டப்படுகிறேன்.

துணைவேந்தர்: பல்கலை விதிகள் என்னவோ அதன்படி துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர். தேவையின்றி பேராசிரியர் பேச அனுமதியில்லை.

இதனிடையே, உறுப்பினர்களுக்கு நகல் வழங்காமல் துணைவேந்தர் 16 தீர்மானங்களை வாசித்தார். இது அதிருப்தியை ஏற்படுத்தியதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in