‘இணையமும் சமூக ஊடகமும் பயங்கரவாதக் குழுக்களின் கருவிகளாகிவிட்டன!’

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

“பயங்கரவாதிகள், போராளிக் குழுக்கள் தங்கள் சித்தாந்தங்களைப் பரப்பவும், சமூகங்களைச் சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதத்துக்கு ஆதரவு திரட்டவும் சதிக்கோட்பாடுகளை உருவாக்கவும் இணையமும் சமூக ஊடகத் தளங்களும் சக்திவாய்ந்த கருவிகளாகிவிட்டன” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டியின் (சிடிசி) கூட்டத்தின் முதல்நாள் அமர்வு மும்பையில் நேற்று நடந்தது. இதன் இரண்டாவது அமர்வு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இரண்டு கூட்டங்களின் தொடக்கத்திலும், பயங்கரவாதச் செயல்களால் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். இதில் இணையப் பயன்பாடு, ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா பறக்கும் வாகனங்கள், கிரிப்டோகரன்ஸி போன்றவை பயங்கரவாதத்துக்கு எப்படி உதவுகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடந்த இரண்டாம் நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெய்சங்கர், “மனிதகுலம் எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று பயங்கரவாதம். சமீப காலமாக, பயங்கரவாதக் குழுக்கள், அவற்றின் சித்தாந்ததைப் பின்பற்றுபவர்கள் - குறிப்பாக சுதந்திரமான சமூக அமைப்பில் பகிரங்கமாகச் செயல்படுபவர்கள், லோன் வுல்ஃப்* தாக்குதல் நடத்துபவர்கள் போன்றோர் இன்றைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் திறனை வளர்த்துக்கொள்கின்றனர்” என்று கூறினார்.

இந்நிகழ்வில், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, தொழில்நுட்ப அறிமுகத்தின் காரணமாக, பயங்கரவாதத் தாக்குதல்களின் தன்மையும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் பாணியும் மாறியிருப்பதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சேர்வதைத் தவிர்க்க சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இன்றுடன் முடிவடையும் இந்தக் கருத்தரங்கத்தில் டெல்லி பிரகடனம் வெளியிடப்படும்.

* பயங்கரவாத அமைப்புகளில் அங்கம் வகிக்காவிட்டாலும் அவற்றின் சித்தாந்தங்களால் கவரப்பட்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தனி மனிதர்கள் லோன் வுல்ஃப் என்று அழைக்கப்படுகிறார்கள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in