எந்த சேமிப்பு திட்டங்களுக்கு எல்லாம் வட்டி உயர்வு: 'செல்வமகள்' சேமிப்புக்கு வட்டி உயர்வில்லை!

எந்த சேமிப்பு திட்டங்களுக்கு எல்லாம் வட்டி உயர்வு: 'செல்வமகள்' சேமிப்புக்கு வட்டி உயர்வில்லை!

பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் சில சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதம் நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, வட்டி விகிதம் 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு 8 சதவீதமாக இருக்கிறது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 123 மாதங்களில் முதிர்வடையும் வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அது, 120 மாதங்களில் முதிர்வடையும் வகையில் 7.2 சதவீத வட்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாதாந்திர வருவாய் திட்ட வட்டி 0.4 சதவீதம் உயர்ந்து 7.1 சதவீதமாகியிருக்கிறது. தேசிய சிறுசேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்து 7 சதவீதம் ஆகிறது. அஞ்சலகங்களில் ஓராண்டு டெபாசிட் திட்ட வட்டி 6.6 சதவீதமாகவும், 2 ஆண்டு டெபாசிட் வட்டி 6.8 சதவீதமாகவும், 3 ஆண்டு டெபாசிட் வட்டி 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட் வட்டி 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வட்டி 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வருமானவரி சலுகை கிடையாது.

அதே சமயத்தில், பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது, 7.6 சதவீதமாக நீடிக்கிறது. அதுபோல், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக நீடிக்கிறது. வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கிறது. தொடர்ந்து 2-வது காலாண்டாக சிறுசேமிப்பு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 தடவை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி உள்ளன. அந்த வரிசையில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in