சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம்
சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம்பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்: கோவை எம்.பி வலியுறுத்தல்

பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்: கோவை எம்.பி வலியுறுத்தல்

பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமை வகித்தார்.  தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு , திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது கோவை நடராஜன் பேசுகையில்," பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களை இணைத்து புதிதாக கோவை ரயில்வே கோட்டம் அமைக்கவேண்டும்.‌ பொள்ளாச்சி வழியாக நாகர்கோவில், ராமேஸ்வரத்திற்கு தினசரி ரயில், பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இண்டர்சிட்டி ரயில்கள், கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும்.

சிங்காநல்லூர், இருகூர் ரயில்வே ஸ்டேஷன்களில் கொரோனா பேரிடருக்கு முன், நின்று சென்ற ரயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் மின்தூக்கி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஸ்டேஷனில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை நடைபாதை மேம்பாலப் பணிகளை உடனே துவங்கி முடிக்க வேண்டும். கோவை ரயில்வே சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.  

ஏற்கெனவே உள்ள சுரங்கப்பாதைகளை தேவைக்கேற்ப அகலப்படுத்துவது அல்லது கூடுதல் பாதை அமைக்கும் பணி துவங்க வேண்டும், என்றார். சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு , திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்கள் தொகுதிக்குட்பட்ட ரயில் சேவைகள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in