திமுக பொதுக்கூட்டத்தில் லஞ்சம் வாங்கிய உளவுத்துறை போலீஸ்: வீடியோ வெளியாகி சர்ச்சை

திமுக பொதுக்கூட்டத்தில் லஞ்சம் வாங்கிய உளவுத்துறை போலீஸ்: வீடியோ வெளியாகி சர்ச்சை

சென்னையை அடுத்த பெருங்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உளவுத்துறை போலீஸ் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெருங்குடியில் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொது கூட்டம் சென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில், பெருங்குடி மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

கூட்டம் முடிந்த பின்பு கலந்து கொண்டவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அனைத்தும் முடிந்த பிறகு துரைப்பாக்கம் உளவுத்துறை போலீஸ் கண்ணன் என்பவருக்கு திமுக பகுதி செயலாளரும், பெருங்குடி மண்டல தலைவருமான ரவிச்சந்திரன் "யேப்பா இங்க வா" என்று அழைத்து அவருக்கு 500 ரூபாய் தாள்களை லஞ்சமாக அள்ளிக் கொடுத்தார். அவரும் அனைத்து போலீஸார் முன்னிலையிலும் பணத்தை புன்னகையுடன் வாங்கிக் கொண்டு கால்சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்த நகரும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி புயலை கிளப்பி வரும் நிலையில் திமுகவினரிடம் லஞ்சம் வாங்கும் உளவுத்துறை அதிகாரியால் எப்படி நேர்மையான தரவுகளை முதலமைச்சருக்கு கொடுக்க முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புவோதோடு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in