இந்து கடவுள் அவமதிப்பு: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சஸ்பெண்ட்

இந்து கடவுள் அவமதிப்பு: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சஸ்பெண்ட்

உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இந்துக்களின் கடவுள் அவமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் மீது விசாரணைக்கு உத்தரவிட்ட நிர்வாகம், அதற்கு காரணமான உதவிப்பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அலிகர் நகரில் அமைந்த மத்தியப் பல்கலைக்கழகமான இது பழம்பெருமை வாய்ந்தது. இதனுள் அமைந்த ஜவகர்லால் நேரு மருத்துவப் பல்கலையின் தடயவியல் ஆய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி செய்பவர் டாக்டர் ஜிதேந்திரா குமார். இவர், எம்பிபிஎஸ் பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 5-ல் வகுப்பு எடுத்தார். அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு உதாரணமாக இந்துக்களின் ஒரு கடவுளை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனால், இந்து கடவுளை டாக்டர் ஜிதேந்திரா குமார் அவமதித்ததாகப் புகார் எழுந்தது. இதை ஆதாரங்களுடன் மாணவர்களில் சிலர் பாஜக தலைவர்களுக்கு அனுப்பியிருந்தனர். தொடர்ந்து பலரும் தம் சமூகவலைப் பக்கங்களிலும் பதிவிட்டிருந்தனர். அதில், உதவி பேராசிரியர் ஜிதேந்திரகுமாரை கைது செய்ய வேண்டும் எனவும் உபி காவல்துறையினரிடம் வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கையில் இறங்கியது.

இப்பிரச்சினையில் உதவி பேராசிரியர் ஜிதேந்திரா குமாரிடம் 24 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. இப்பிரச்சினை மீது விசாரணை செய்ய இரண்டு பேராசிரியர்கள் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இதனால், தனது மத்திய அரசு பணிக்கு ஆபத்து என உணர்ந்த டாக்டர்.ஜிதேந்திரா குமார், தனது நடவடிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், டாக்டர் ஜிதேந்திரா குமாரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குழு தனது அறிக்கை அளிக்கும் வரை உதவிப் பேராசிரியர் ஜிதேந்திராவின் பணியிடைநீக்கம் தொடரும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அலிகரின் பாஜக நிர்வாகியும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான டாக்டர் நிஷித் சர்மா சம்மந்தப்பட்ட சிவில் லைன் காவல்நிலையத்தில் அளித்துள்ளார். இதன் மீது ஐபிசி 294-ஏ, 153-ஏ, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் எதிர்கட்சியான சமாஜ்வாதியின் அலிகர் நிர்வாகி ரூபினா கானும், ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், இந்து கடவுளை அவமதித்த உதவிப் பேராசிரியர் ஜிதேந்திராவின் நாக்கை துண்டிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசு அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த துண்டிப்பு, தனது இந்து சகோதரர்களின் மதத்தை புண்படுத்துவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் எனவும், எந்த ஒரு சமூகத்தினரையும் அவமதிப்பு தேசதுரோகச் செயல் என்றும் ரூபினா தெரிவித்துள்ளார்.

இத்துடன் ரூபினா இந்துக் கடவுளை அவமதித்த பைத்தியக்காரப் பேராசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் தாரீக் மன்சூருக்கும் கடிதம் எழுதியுள்ளார். 150 வருடப் பழமைவாய்ந்த இப்பல்கலைக்கழகத்தில் 40,000 மாணவர்கள், 4,000 அலுவலர்கள் மற்றும் 1800 பேராசிரியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in