`5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ஜாமீனில் விடுகிறேன்'- ரவுடியிடம் பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் சிக்கினார்

இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர்
இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர்

லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் ஷியாம்சுந்தர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் ஷியாம்சுந்தர். இவர் வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பல்வேறு விதங்களில் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வந்தது. இந்நிலையில் சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி சீனுவாசன் மகன் ஸ்ரீகாந்த் ( 40) என்பவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குள்ளஞ்சாவடி போலீஸார் கைது செய்திருந்தனர்.

அவரை சிறையில் அடைக்காமல் காவல் நிலைய  ஜாமீனில் விடுவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு ஷியாம் சுந்தர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம்  கொடுக்க விரும்பாத ஸ்ரீகாந்த்  இதுபற்றி  கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்தார். ஏற்கெனவே ஆய்வாளர் ஷியாம் சுந்தர் பற்றி தகவல் கிடைத்ததால், சந்தர்ப்பத்துக்காக  காத்திருந்த போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஸ்ரீகாந்திடம் கொடுத்து ஷியாம்சுந்தரிடம் கொடுக்கச் சொன்னார்கள். 

லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறிய அறிவுரைப்படி ஸ்ரீகாந்த் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நேற்று இரவு காவல் நிலையம் அருகேயுள்ள  காவலர்கள்  குடியிருப்புக்கு சென்றார். அங்கு ஆய்வாளர்  ஷியாம் சுந்தரை சந்தித்து ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீஸார் ஷியாம் சுந்தரை கையும், களமாக பிடித்து கைது செய்தனர்.

ரவுடியிடம் லஞ்சம் கேட்டு,  அதைப் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கையும்  களவுமாக காவல்  ஆய்வாளர் பிடிபட்டிருப்பது கடலூர் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in