கோயிலுக்குள் கேக் பெட்டியில் வெடிகுண்டு உள்ளது: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்

கோயிலுக்குள் கேக் பெட்டியில் வெடிகுண்டு உள்ளது: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்மபோன்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கோரக்நாத் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு கேக் பெட்டியில் 4 பேர் வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்றும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் தான் பிஹார் மாநிலம் வைஷாவியைப் பூர்விகமாக் கொண்டவன் என்றும், தற்போது கோரக்பூரில் உள்ள கோல்கரில் வசிப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார், கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலுக்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சென்று சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது புரளி எனத் தெரிய வந்தது. இதனால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த முகவரியை சோதனை செய்த போது அது போலி எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரது போனைத் தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், போன் சிக்னலை வைத்து மல்கின் ஓட்டலுக்கு அருகில் உள்ள கார்மல் சாலையில் அவர் இருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," கைது செய்யப்பட்ட 22 வயது வாலிபர், கோரக்பூரில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள பேக்கரியில் பொருட்களை டெலிவரி செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பொருட்களை டெலிவரி செய்யச் சென்ற போது தர்ம சாலா மார்க்கெட் அருகே போக்குவரத்து விதிகளை மீறியதாக காவலர் ஒருவர் அவரைத் திட்டியுள்ளார். இதனால் மனம் புண்பட்டதால், போலீஸாருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து தொலைபேசி மூலம் வெடிகுண்டு புரளி விடுத்ததாக எங்களிடம் கூறினார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

போலீஸ்காரர் ஒருவர் திட்டியதற்காக கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபரின் செயல் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in