
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியாக பரவும் வீடியோ காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை ரயில் நிலையத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் படையெடுத்தனர். இதன் எதிரொலியாக கோவை கலெக்டரிடம் தமிழக அரசு அதிகாரிகள் வடமாநில அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என 20 தொழில் அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன. உலகளவில் அதிக அளவிலான வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன. பம்புகள் தயாரிக்கும் தொழில்நிறுவனங்கள் விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு வகிப்பதால் கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்கள் இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள். கோவை மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு தொழில்களில் 2 லட்சம் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அடுத்து கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு கோவை ரயில் நிலையங்களில் குவிகின்றனர். குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்துக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு காரணமாக கோவை தொழில்நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், சிவ சண்முககுமார் தலைமையில் 20 தொழில் அமைப்புகளின் தலைவர்கள் கோவை கலெக்டர் கிராந்திகுமாரிடம் இப்பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள், பீகார் உள்ளிட்ட வடமாநில அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முறையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், "கடந்த சில தினங்களாக கோவையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வதந்தியாக பரவி வருகின்றன. குறிப்பாக இது தொடர்பாக பீகார் சட்டமன்றத்தில் அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என பேசி உள்ளனர். இதன் காரணமாக இங்கு உள்ள வடமாநில தொழிலாளர்கள், குறிப்பாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் கடந்த இரண்டு நாட்களாக கோவையை விட்டு வெளியேறி வருகின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் படையெடுக்கின்றனர். இதனால் கோவை தொழில் நிறுவனங்கள் முடங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுதான் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மெல்ல மெல்ல சூழ்நிலை சரியாகி தொழில் நிறுவனங்கள் முன்னேறி வருகிறது. தற்போது இது போன்ற பிரச்சினையால் மீண்டும் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக பீகார் உள்ளிட்ட வட மாநில அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோவையில் உள்ள தொழிலாளர்களிடம் அதிகாரிகள் ஹிந்தியில் பேசி அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஊர்களை விட்டு செல்லாமல் இருப்பார்கள்" என்றார்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், "வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும். பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள் மற்றும் புகார்கள் தீர்ப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களை குறைகளை தீர்க்க குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையின் மூலமும் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே பிறமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கி வரும் 1077 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி, கைப்பேசி எண் 0422-2300970, 9498181213, 8190000100, 9443808277 மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண் 9498181212, 7708100100 ஆகியவற்றிற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும்" என்றார்.