‘உங்கள் தாயுடன் நீங்கள் சேர்ந்து வசிக்க முடியாது’ - இந்திராணி மகளின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது ஏன்?

இந்திராணி முகர்ஜி
இந்திராணி முகர்ஜி

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போரா கொலைவழக்கில் ஜாமின் பெற்று மும்பையில் தங்கியிருக்கும் நிலையில், அவருடன் சேர்ந்து வசிக்க அனுமதிக்குமாறு அவரது மகள் விதீ விடுத்த கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. என்ன காரணம்?

வழக்கின் பின்னணி

இந்திராணி முகர்ஜியின் மூத்த மகளான ஷீனா போரா 2012 ஏப்ரல் மாதம் காணாமல் போனார். அவரை அவரது தாய் இந்திராணி முகர்ஜி, வளர்ப்புத் தந்தை சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோர் காரிலேயே வைத்து அவரைக் கொலை செய்ததும், ராய்கட் மாவட்டத்தில் ஒரு காட்டில் வைத்து அவரது சடலம் எரிக்கப்பட்டதும் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தெரியவந்தன.

ஷ்யாம்வர் ராய் வேறொரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோதுதான் இந்த விஷயமே வெளிப்பட்டது. அதுவரை ஷீனா போரா அமெரிக்காவில் இருப்பதாகப் பொய் சொல்லிவந்தார் இந்திராணி முகர்ஜி.

உண்மையில், இந்திராணி முகர்ஜியின் முன்னாள் காதல் கணவர் சித்தார்த்த தாஸுக்குப் பிறந்தவர் ஷீனா போரா. ஷீனாவுக்கு மிக்கேல் எனும் சகோதரரும் உண்டு. அதன் பின்னர் சஞ்சீவ் கன்னா என்பவரை இந்திராணி திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் விதீ எனும் மகள் பிறந்தார். பின்னர் பீட்டர் முகர்ஜி என்பவரை இந்திராணி மணம் புரிந்தார். இதற்கிடையே, ஷீனா போரா தனது தாயைத் தேடி மும்பைக்கு வந்தார். ஷீனாவைத் தனது தங்கை என்றும், மிக்கேலைத் தனது தம்பி என்றும் உலகுக்கு அறிமுகப்படுத்திய இந்திராணி அவர்களைப் படிக்க வைத்தார். வேலைக்கும் அனுப்பினார்.

இந்தக் காலகட்டத்தில் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்குப் பிறந்த ராகுல் முகர்ஜிக்கும் ஷீனாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இது முறை தவறிய உறவு என்று உணர்ந்த இந்திராணி அதை ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் ஷீனாவைக் கொலை செய்ய முடிவெடுத்தார். சஞ்சீவ் கன்னா, ஷ்யாம்வர் ராய் ஆகியோருடன் சேர்ந்து சதி செய்து ஷீனாவைக் கொலை செய்தார்.

பல திருப்பங்கள் நிறைந்த இந்த வழக்கில் 2015 ஆகஸ்ட்டில் இந்திராணி கைதுசெய்யப்பட்டார். அவருடன் சஞ்சீவ் கன்னா, ஷ்யாம்வர் ராய் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர் என பீட்டர் முகர்ஜியும் கைதானார்.

இந்த வழக்கில் இந்திராணிக்கும் பீட்டருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மும்பையில் இந்திராணி தங்கியிருக்கிறார்.

புதிய மனு

இந்நிலையில், பல ஆண்டுகளாக லண்டனில் வசித்துவந்த விதீ, செப்டம்பர் 10-ல் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் தனது தாய் இந்திராணியுடன் சேர்ந்து வசிக்க தன்னை அனுமதிக்குமாறு, ஆகஸ்ட் 30-ல் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்திராணி கைதுசெய்யப்பட்டபோது விதீ ஒரு சிறுமி என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கும் அவரது வழக்கறிஞர் ரஞ்சித் சாங்லே, தனது தாயின் அரவணைப்பு இல்லாமல் அவர் வாடிவருவதாகவும், அந்தப் பிரிவு அவரை உணர்வுபூர்வமாகப் பாதித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் இந்திராணிக்கு மருத்துவ உதவியும் அரவணைப்பும் தேவைப்படுவதாகவும், இந்தச் சூழலில் தனது தாய்க்கு உதவியாக இருக்க விதீ விரும்புவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. விதீ இந்த வழக்கின் முக்கிய சாட்சி என்பதால் இந்திராணியுடன் அவர் தங்க அனுமதிக்கக் கூடாது என வாதிட்டது.

இந்திராணிக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், சில முக்கியமான நிபந்தனைகளையும் விதித்திருந்தது. குறிப்பாக, சாட்சிகளிடம் தாக்கம் செலுத்தவோ, சாட்சியங்களை கலைக்கவோ அவர் முயற்சிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய சிபிஐ தரப்பு, விதீயின் சாட்சியம் பதிவுசெய்யப்படும் வரை அவரை இந்திராணி சந்திக்கவோ, தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவோ கூடாது என்று வாதிட்டது.

இதையடுத்து, விதீயின் மனுவைத் தள்ளுபடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in