
இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
மேற்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளின் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் மையமாக இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இருந்தபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், கடுமையான பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த 10-ம் தேதி இந்தோனேசியாவின் டனிம்பர் தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.