பயணிகள் அதிர்ச்சி... கிலோ மீட்டரை வைத்து கட்டணத்தை அதிகரித்த விமான நிறுவனம்!

இண்டிகோ விமான நிறுவனம்
இண்டிகோ விமான நிறுவனம்

அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை காரணமாக விமான டிக்கெட்டுகளின் விலையை 300 முதல் 1000 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் தனியார் விமான சேவை நிறுவனங்களில் இண்டிகோ மிக முக்கியமானது. இந்தியாவின் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் இந்த விமான நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. சுமார் 1900க்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்குவதோடு, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு விமான சேவையில் 60 சதவீதத்தை இண்டிகோ கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் விமான எரிபொருள் கட்டணங்களின் காரணமாக, டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம்
இண்டிகோ விமான நிறுவனம்

300 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை இந்த கட்டண உயர்வு இருக்கும் என இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு 300 ரூபாய் வரையிலும், ஆயிரம் முதல் 1500 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு 550 ரூபாய் வரையிலும், 1500 முதல் 2500 கிலோமீட்டர் வரை 650 ரூபாய் வரையிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல் 2500 முதல் 3,500 கிலோ மீட்டர் வரை 800 ரூபாயும், 3500 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் பயணங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைக்கு இண்டிகோ நிறுவனம் மட்டுமே இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ள நிலையில், விரைவில் மற்ற விமான சேவை நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in