அன்று கேரள அரசால் கொண்டாடப்பட்டவர் இன்று சொமேட்டோ டெலிவரிபாய்: இந்தியாவின் முதல் திருநம்பி விமானிக்கு ஏன் இந்த நிலைமை?

அன்று கேரள அரசால் கொண்டாடப்பட்டவர் இன்று சொமேட்டோ டெலிவரிபாய்: இந்தியாவின் முதல் திருநம்பி விமானிக்கு ஏன் இந்த நிலைமை?

ஆதம் ஹாரி இந்தியாவின் முதல் திருநம்பி விமானி என கடந்த காலத்தில் கொண்டாடப்பட்டவர். கேரள அரசே இவரை கொண்டாடித் தீர்த்தது. இப்போது ஆதம் ஹாரி சொமேட்டோ உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்யும் தகவல் கேரளத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆதம் ஹாரிக்கு என்னதான் ஆயிற்று? அவரிடமே காமதேனு இணையதளத்திற்காகப் பேசினோம்.

”எனக்குப் பூர்விகம் திருச்சூர். சின்ன வயசுல இருந்தே பைலட் ஆகணும்னு ஆசை. முதல்ல எல்லா பொண்ணுங்களையும் போலத்தான் வாழ்க்கை இயல்பா இருந்துச்சு. ஒருகட்டத்துல எனக்குள் ஆண் தன்மையை உணர ஆரம்பிச்சேன். நான் ஒரு திருநம்பின்னு குடும்பத்துல யாராலயும் ஏத்துக்க முடியல. வெளியில நான் திருநம்பின்னே தெரியக் கூடாதுன்னு நாலு சுவர்களுக்கு இடையில அடைக்கப்பட்டேன். என்னால என் குடும்பத்தையும் சமூகம் ஏளனமா பார்க்கும்னு அவங்க நினைச்சுட்டு இருந்தாங்க.

இத்தனை துயரங்களுக்கு மத்தியில ஒரே ஆறுதல் என்னன்னா, என்னோட குடும்பத்துல என்னை நல்லாப் படிக்க வச்சதுதான். பிளஸ் டூ முடிச்சதும் பைலட் கோர்ஸ் படிக்கணும்னு என்னோட ஆசையைச் சொன்னேன். தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிப் படிக்க வச்சாங்க. ஜோகன்னஸ்பர்க்ல, லான்சிரியா விமான நிலையத்தோட சேர்ந்த அகாடமியில்தான் படிச்சேன். தென்னாப்பிரிக்கா நாட்டின் தனியார் விமானி உரிமமும் பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து, திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி அகாடமியில கமர்ஷியல் பைலட் கோர்ஸில் சேர்ந்துபடிச்சேன். இதற்கு எனக்கு 23 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி கேரள அரசின் சமூகநலத் துறை தான் படிக்கவும் வைத்தது. தென்னாப்பிரிக்காவில் விமானி லைசன்ஸ் பெற்றிருந்தாலும், நம் தேசத்தில் உயரப்பறக்கவே விரும்பினேன். பெண்ணாக இருந்து திருநம்பியாக மாறியதால் ஹார்மோன் சிகிச்சை செய்திருக்கிறேன். இன்னும் எனக்கு ஹார்மோன் சிகிச்சை முழுமையாக முடியவில்லை. ஹார்மோன் சிகிச்சை இப்போதும் நடந்துவருவதாலும், ஹார்மோன்களின் படிப்படியான மாற்றத்தாலும் விமானியாக முடியாது என இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் எனக்கு லைசன்ஸ் தரவில்லை. வேறு வேலை வேண்டுமே என சொமேட்டோவில் டெலிவரி பாயாக இருக்கிறேன்” என்கிறார்.

 ‘சி-295’ ரக போக்குவரத்து விமானம்
‘சி-295’ ரக போக்குவரத்து விமானம்’தி இந்து’ கோப்புப் படம்

இதுகுறித்து விமானி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளோ, “பாலின டிஸ்போரியா என்னும் பாதிப்பு அவருக்கு இருக்கிறது. ஹாமோன்களின் நிஜ பாலினம், மாற்றம் காணும் பாலினம் இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம் இதில் அதிகமாக இருக்கும். இதனால் அமைதியும், பதற்றமின்மையும் இருக்கும். அப்படி இருக்கையில் எப்படி விமானியாகப் பறக்க முடியும்? அதனால் தற்காலிகமாக சான்று வழங்கவில்லை” என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in