நாட்டிலேயே முதன்முறையாக... போதைப்பொருள் குற்றவாளிகள் குறித்த தரவுத் தளம்!

நாட்டிலேயே முதன்முறையாக... போதைப்பொருள் குற்றவாளிகள் குறித்த தரவுத் தளம்!

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் நீதிமன்றங்கள், காவல் துறையினர், சிறைத் துறையினர், தடய அறிவியல் துறையினர் இனி அது தொடர்பான தரவுகளைத் தனித்தனியாகத் தேடி அலையத் தேவையில்லை. போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் இனி அவர்களுக்குப் பெருமளவில் உதவிசெய்யவிருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைந்த தரவுத் தளத்தின் பெயர் ‘நிடான்’ (NIDAAN); அதாவது - கைது செய்யப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் பற்றிய தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம்.

ஜூலை 30-ல், சண்டிகரில் நடந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாட்டின்போது போதைப்பொருள் ஒருங்கிணைப்பு செயல்முறையை (NCORD) உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அதன் ஓர் அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் நிடான் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இதை உருவாக்கியிருக்கிறது. குற்றவியல் நீதி அமைப்பு (ஐசிஜேஎஸ்), கிளவுட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இ-பிரிசன்ஸ் எனும் தரவு அமைப்பு ஆகியவற்றிலிருந்து இதற்கான தரவுகள் பெறப்படும். குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்பு (சிசிடிஎன்எஸ்) இதற்கான உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கித் தரும்.

போதைப்பொருள் தொடர்பான அனைத்துக் குற்றாவளிகள் குறித்த தகவல்களையும் இதிலிருந்து பெற முடியும் என்பதால், போதைப்பொருள் தயாரிப்பவர்கள், பதுக்கிவைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் என அனைவரையும் கண்காணிக்க முடியும். போதைக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இந்தத் தரவுத்தளம் மிகப்பெரிய உதவும் எனக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in