‘இது போதாது’ - ஏவுகணை விழுந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அதிருப்தி!

‘இது போதாது’ - ஏவுகணை விழுந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அதிருப்தி!

பாகிஸ்தானில் இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை தவறுதலாக விழுந்தது தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்நாடு வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த மார்ச் 9-ல், ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் இருந்து இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானின் மியான் சன்னு நகரில் விழுந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் முடிவுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது.

மார்ச் 11-ல் இதுகுறித்து விளக்கமளித்த இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம், அந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானில் விழுந்ததாகத் தெரிவித்தது. இந்தச் சம்பவம் ஆழ்ந்த வருத்தத்துக்குரியது என்றும், வழக்கமான பராமரிப்புப் பணியின்போது நிகழ்ந்த தொழில்நுட்பக் கோளாறுதான் அதற்குக் காரணம் என்றும் கூறிய பாதுகாப்புத் துறை, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

அதன்படி, விசாரணை நீதிமன்றம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்திய விமானப் படடையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ஆகஸ்ட் 23-ம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாதுகாப்பு நடைமுறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றாததால், அந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

’‘எதிர்பார்த்தபடியே, இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கை முற்றிலும் அதிருப்தியளிக்கக்கூடியது; குறைபாடுள்ளது. இந்நடவடிக்கை போதாது. மிகவும் பொறுப்பற்ற இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை இந்தியா இப்படி முடித்திருப்பதை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இதுதொடர்பாகக் கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், வெளிப்படைத்தன்மையுடன் கூட்டு விசாரணைக்கு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in