அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் உட்கொள்கிறார்கள்: இந்தியர்கள் குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட லான்செட்!

அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் உட்கொள்கிறார்கள்: இந்தியர்கள் குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட லான்செட்!

கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பும், பரவல் தொடங்கிய பின்னரும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் (உயிரி எதிர்) மருந்துகளை எடுத்துக்கொண்டதாகச் சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலகின் மிக நம்பகமான மருத்து ஆய்வு இதழான ‘லான்செட்’, மருத்துவ உலகின் போக்குகள் குறித்த தகவல்களையும் விமர்சனக் கட்டுரைகளையும் வெளியிட்டுவருகிறது. வார இதழான லான்செட்டில் செப்டம்பர் 1 தேதியிட்ட இதழில், உலக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்தின் பயன்பாடு குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

‘அசித்ரோமைஸின் போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை இந்தியர்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்கின்றனர். குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பும், பரவலின்போது இந்தப் பயன்பாடு அதிகமாக இருந்தது’ என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வரையறுக்கப்பட்ட தினசரி அளவு (டிடிடி) எனும் அலகின் அடிப்படையில், தனிநபர்களின் ஆன்டிபயாட்டிக் பயன்பாடு இதில் ஆய்வுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்து அசித்ரோமைஸின் ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் சிஃபிக்ஸைம் மருந்து இடம்பெற்றிருக்கிறது.

பெரும்பாலும் மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறியிருக்கும் இந்த அறிக்கை, இவ்விஷயத்தில் கொள்கை மற்றும் ஒழுங்குமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த, ‘இந்தியாவின் பொது சுகாதாரம்’ எனும் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆஷ்னா மேத்தா இந்த ஆய்வில் முக்கியப் பங்காற்றியதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகவும், பொருத்தமற்ற வகையிலும் பயன்படுத்துவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்துவிடும். இந்தியாவில் இந்தப் பிரச்சினை அதிகம். இந்நிலையில், லான்செட் இதழில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in