பறந்தது பாகிஸ்தான் விமானமா?

விமர்சனத்துக்கு உள்ளான இந்திய செய்தி நிறுவனம்
அந்தக் காணொலி
அந்தக் காணொலி

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராகப் போராடி வரும் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) குழுவின் தலைவர் அஹ்மத் மசூத் சமீபத்தில் வெளியிட்ட காணொலியில், தாலிபான்களுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் போர் விமானங்கள் எங்கள் குழுக்கள் அதிகமிருக்கும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்களும், பாகிஸ்தான் அரசாங்கமும் கூட்டாளிகள் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

அஹ்மத் மசூத்
அஹ்மத் மசூத்

நேற்று இந்தியாவைச் சேர்ந்த ‘டைம்ஸ் நவ்’ செய்திச் சேனலில், ‘ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானங்கள் குண்டு தாக்குதல் நடத்தும் காட்சிகள் முதன்முதலாக மக்கள் பார்வைக்கு’ என்று ஒரு காணொலி வெளியிடப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதிகளில் தாழ்வாகப் பறக்கும் போர் விமானத்தைக் காட்டும் இக்காணொலியை வெளியிட்டு, அதைக் குறித்து அந்தச் சேனலில் விவாத நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

டைம்ஸ் நவ் சேனலின் ட்வீட்
டைம்ஸ் நவ் சேனலின் ட்வீட்

இது வெளியான சிறிது நேரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநரான ஜார்ஜ் ஆலிஸன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான F-15 ரக விமானம் ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள வேல்ஸ் நாட்டில் பறக்கும் காணொலி இது’ என்று உண்மையை வெளியிட்டார்.

காணொலியின் பின்னணி :

இங்கிலாந்தில் உள்ள ராயல் ஏர்போர்ஸ் லேக்கன்கீத் என்ற அமெரிக்க விமான தளத்திலிருந்து பயிற்சிக்காக விமானங்கள் வேல்ஸில் அமைந்துள்ள ‘மேச் லூப்’ எனப்படும் வட்டப் பாதையில் பயிற்சி எடுப்பது வழக்கம். தாழ்வாகப் பறப்பதற்குப் பயிற்சி எடுக்க இந்த வட்டப்பாதை போர் விமானிகள் மத்தியில் மிகப் பிரபலம். தரையிலிருந்து 250 அடி உயரத்தில் எல்லாம் இந்த வட்டப்பாதையில் மிகப் பெரிய போர் விமானங்களை ஓட்டி விமானிகள் பயிற்சி எடுப்பார்கள்.

மேச் லூப் வழித்தடம்
மேச் லூப் வழித்தடம்நன்றி : machloop.co.uk

அப்படி ஒரு பயிற்சியின்போது எடுக்கப்பட்ட ஒரு காணொலியைத்தான், பாகிஸ்தான் விமானங்கள் ஆப்கானில் தாக்குதல் நடத்துகின்றன என்று செய்தி வெளியிட்டு இந்திய செய்தி நிறுவனம் கேலிக்குள்ளாகியுள்ளது. ‘வாட்ஸ் - அப் வதந்திகளை நம்பி செய்திச் சேனல் நடத்தவேண்டாம்’ என்றெல்லாம் ட்விட்டரில் அந்த நிறுவனத்தை வறுத்தெடுத்து வருகிறார்கள் பொதுமக்கள்.

காணொலி பொய்யாக இருந்தாலும் அஹ்மத் மசூத் கூறிய குற்றச்சாட்டு, இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in