தமிழக மீனவர்களின் படகை துளைத்த 47 குண்டுகள்: விசாரணையை தொடங்கியது இந்திய கடற்படை!

தமிழக மீனவர்களின் படகை துளைத்த 47 குண்டுகள்: விசாரணையை தொடங்கியது இந்திய கடற்படை!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை  துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில்  நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச்  குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகினை  இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடமும்  விசாரணை நடத்தினர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த 15-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகு மீது  இந்திய கடற்படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்  துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிலாடுறை மாவட்டம், வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார்.

அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மற்ற மீனவர்கள் 9 பேரும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்து  விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இன்று  ஆய்வு மேற்கொண்டனர். 

துப்பாக்கிச் சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்தியகடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் விசைப் படகில் 47 குண்டுகள் துளையிடப்பட்ட ஓட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். 

அதைத்தொடர்ந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் விசாரணை நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் அடுத்ததாக  குண்டடிப்பட்ட மீனவர் வீரவேலிடம் விசாரணை நடத்த மதுரை சென்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in