அதிகரிக்கும் பதற்றம்: இலங்கைக்குப் படைகளை அனுப்புகிறதா இந்தியா?

அதிகரிக்கும் பதற்றம்: இலங்கைக்குப் படைகளை அனுப்புகிறதா இந்தியா?

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணம் ராஜபக்ச குடும்பத்தினரின் தவறான கொள்கைகள்தான் எனக் குற்றம்சாட்டி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அமைச்சர் பொறுப்புகளில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினர் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்ட நிலையில், திங்கள்கிழமை (மே 9) பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். முன்னதாக அவரது ஆதரவாளர்கள், காலிமுக மைதானத்தில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களைச் சேதப்படுத்தி அவர்களைத் தாக்கியதால் பெரும் வன்முறை மூண்டது.

கோபமடைந்த மக்கள் மகிந்தவின் பூர்விக இல்லம் உட்பட அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பி-க்களுக்குச் சொந்தமான வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தீவைத்து வருகிறார்கள். வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மகிந்த கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோத்தபய பதவிவிலக வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து கோரிவருகிறார்கள்.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குத் தப்பி வந்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டன. இதையடுத்து, ‘குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றதாக சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவிவருவது எங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது. இவை தவறானவை; அப்பட்டமான பொய்த் தகவல்கள்’ என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், இலங்கைக்கு இந்திய ராணுவம் தனது படைகளை அனுப்புவதாகத் தகவல்கள் பரவின. இதையும் இந்தியா உறுதியாக மறுத்திருக்கிறது.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதரகம், ‘இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில குறிப்பிட்ட ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஊக அடிப்படையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவல்களும் இது குறித்த கருத்துகளும் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்குப் பொருத்தமானவை அல்ல’ என அதில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ‘இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மையைக் காக்கவும் பொருளாதார மீட்சிக்கு உதவவும் முழு ஆதரவையும் வழங்குவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று தெளிவாகத் தெரிவித்திருந்தார்’ என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருக்கிறது.

இலங்கை மக்களின் நலன் சார்ந்து ஜனநாயக முறையில் வெளிப்படுத்தப்படும் கோரிக்கைகளின் வழி இந்தியா செயல்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.