அமேசான் மீதான லஞ்சப் புகாரை இந்திய அரசும் விசாரிக்கும்!

அமேசான் மீதான லஞ்சப் புகாரை இந்திய அரசும் விசாரிக்கும்!

டெல்லி அரசு உயர் அதிகாரி ஒருவர், ”அமேசான் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர் என்ற புகாரை இந்திய அரசும் விசாரிக்கும். எந்தவிதமான ஊழலையும் லஞ்சத்தையும் சகித்துக்கொள்ளக்கூடாது என்பதே இந்திய அரசின் லட்சியமும் என்பதால் அமேசான் மீது கூறப்படும் லஞ்சப் புகார்களை விசாரிக்கும்” என்று இன்று (செப். 21) தெரிவித்தார். ”இந்த லஞ்சம் எந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது, எந்த மாநிலத்தில் வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமேசான் நிறுவனம் தனது சட்ட ஆலோசகர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.8,500 கோடியைக் கட்டணமாகச் செலுத்துகிறது. ”இந்தப் பணம் முழுக்க அவர்களுடைய சேவைகளுக்காகத் தரப்படுகிறதா, அல்லது அவர்கள் மூலம் இந்திய அதிகாரிகள் உள்பட வேறு எவருக்காவது தரப்படுகிறதா என்பது விசாரிக்கப்படும்” என்ற அதிகாரி, ”சட்டத்தை மீறிச் செயல்படும் தனது நிறுவன அதிகாரிகள் மீது அமேசான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக ‘தி மார்னிங் கான்டெக்ஸ்ட்’ இணையதளம் விவரங்களைத் தருகிறது. ஊழல் குறித்து ‘உண்மை விளம்பி’ ஒருவர் தகவல்களைத் தெரிவித்ததும் அமேசான் நிறுவனம் விசாரணையைத் தொடங்கிவிட்டது. நிறுவனத்தின் மூத்த சட்ட ஆலோசகர் விடுமுறையில் செல்லுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார். நிறுவனத்தைச் சேராத, சுயேச்சையான வழக்கறிஞருக்குத் தந்த பணத்தில் ஒரு பகுதியை அவர் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாகத் தந்திருக்கிறார் என்று தெரியவருகிறது.

வர்த்தகர்கள் கூட்டமைப்பு பியூஷ்கோயலிடம் கோரிக்கை இந்த லஞ்சப் புகார் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று அனைத்திந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு, ஒன்றிய வணிக அமைச்சர் பியூஷ் கோயலுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அனைத்து நிலைகளிலிருந்தும் ஊழலை ஒழிப்பதே லட்சியம் என்று அறிவித்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு அரசின் மீதான நம்பகத் தன்மையையே சந்தேகம் காண வைப்பதால், சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று கடிதம் வலியுறுத்துகிறது. அமெரிக்காவிலும் இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் பங்கு பரிவர்த்தனை ஆணையத் தலைவர் கேரி ஜென்ஸ்லர் அணுகப்படுவார் என்று கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இந்திய மின்வணிகத்தை நடுநிலையோடு நேர்மையாக நடத்த, இந்த விசாரணைகள் அவசியம் என்று கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பி.சி. பாரதியா குறிப்பிட்டார். தேவையில்லாமல் செல்வாக்கைச் செலுத்துவது, தங்களுடைய பணபலத்தைக் கொண்டு ஆதிக்கம் செய்வது, அரசு அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை தடுக்கப்பட வேண்டும் என்றார்.

வர்த்தகப் போட்டி (ஒழுங்காற்று) ஆணையம் ஏற்கெனவே அமேசான் மீதான புகார்களை விசாரித்துக் கொண்டிருக்கிறது. பொருள்களுக்கான விலையை அடக்க விலையைவிட வெகுவாகக் குறைப்பது, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சலுகை விலையில் விற்பது என்று முறையான வர்த்தக நடைமுறைகளை மீறிச் செயல்படுகிறது அமேசான் என்று பல புகார்கள் வந்துள்ளன.

Related Stories

No stories found.