பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மீனவர்

ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை என இந்தியா அறிவிப்பு
பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மீனவர்

பாகிஸ்தான் கடற்படையினரால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவத்தை அடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியில் அணுகப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 6-ம் தேதி, குஜராத்தின் ஓகா பகுதி அருகே, அரபிக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு மீது, பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த ‘பாகிஸ்தான் மேரிடைம் செக்யூரிட்டி ஏஜென்ஸி’யினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மீனவர் ஸ்ரீதர் ராமேஷ் சாம்ரே உயிரிழந்தார். காயமடைந்த இன்னொரு மீனவருக்கு, ஓகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ‘ஜல்பரி’ எனும் பெயர் கொண்ட அந்தப் படகில் இருந்த 6 மீனவர்கள், பாகிஸ்தான் படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்தபோது இந்தியக் கடல் எல்லைக்குள்தான் மீனவர்கள் இருந்ததாகவும், முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இன்றி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இந்தியத் தரப்பு புகார் கூறுகிறது. ஆனால், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகவும், அவர்களைப் பலமுறை எச்சரித்ததாகவும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் பாகிஸ்தான் மேரிடைம் செக்யூரிட்டி ஏஜென்ஸியினர் கூறியிருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, அங்கு இந்தியக் கடற்படையினர் விரைந்துசென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினை போல, இந்தியா - பாகிஸ்தான் மீனவர் பிரச்சினையும் தொடர்ந்து நடந்துவருகிறது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, இரு நாடுகளும் பரஸ்பரம் பிற நாட்டு மீனவர்களைக் கைதுசெய்திருக்கின்றன. 2020 டிசம்பர் வரையில், குஜராத்தைச் சேர்ந்த 345 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக, குஜராத் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் புதிதல்ல. 2020 ஏப்ரல் மாதத்தில் இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் 2 முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். 2019-ல் இந்திய மீனவர்களின் படகு ஒன்றை, பாகிஸ்தான் படையினர் கடலில் மூழ்கடித்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.

மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் இந்தியா, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் பாகிஸ்தானுடன் ராஜதந்திர ரீதியில் பேசப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2012-ல் கேரளா அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை, 'என்ரிகா லாக்ஸி' என்ற சரக்குக் கப்பலில் பாதுகாப்புப் பணியில் இருந்த இத்தாலியக் கடற்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் நினைவுகூரப்படுகிறது. அந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்துக்குச் சென்றபோது, தங்கள் மீது இந்திய அரசு சட்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து இத்தாலியக் கடற்படையினர் இருவரும் விலக்குப் பெறமுடியும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த இத்தாலியக் கடற்படையினர் இருவரும் இத்தாலிக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்னர், மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை. இறுதியில் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு அத்துமீறி நடந்துகொள்ளும் பாகிஸ்தான் படையினர் மீது, நடவடிக்கை அவசியம் என இந்திய மீனவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.