செஸ் ஒலிம்பியாட் : இரண்டாவது நாளிலும் வெற்றிகளைக் குவித்த இந்தியா!

செஸ் ஒலிம்பியாட் : இரண்டாவது நாளிலும் வெற்றிகளைக் குவித்த இந்தியா!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் மூவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் மற்றவர்களும் வெற்றி பெறும் நிலையில் விளையாடி வருகிறார்கள்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நேற்றைய முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற வீரர்கள் வெற்றிகளைக் குவித்தனர். அதுபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் வெற்றிகளை ஈட்டிவருகிறார்கள்.

இரண்டாவது நாளான இன்று இந்தியாவின் 6 அணிகள் சார்பாக 8 பேர் இந்திய அணியில் இன்று விளையாடினார்கள். அதில் மூன்று அணி வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் ஓபன் பிரிவில் 'ஏ' மற்றும் 'பி' அணிகளும், அதுபோல் மகளிர் பிரிவில் பங்கேற்றுள்ள 'சி' அணியும் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

'பி 'பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கிராண்ட் மாஸ்டர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். முகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் ஆகிய மூவரும் இந்தியாவின் 'பி' அணியில் பங்கேற்று விளையாடினர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி வெற்றி பெற்றார். கறுப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா 41-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதுபோல் இந்திய ஓபன் 'பி' அணியில் விளையாடிய மற்றொரு தமிழக வீரர் அதிபன் பாஸ்கரனும் வெற்றி பெற்றுள்ளார். மகளிர் அணியின் ‘சி’ பிரிவிலும் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், இன்றைய போட்டிகளில் குறைந்த பட்சம் 6 வெற்றிகளையாவது இந்தியா குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in