‘எந்த நெருக்குதலுக்கும் இந்தியா பணியாது' - உலக வர்த்தக அமைப்பிடம் பியூஷ் கோயல் பேசியதன் பின்னணி

‘எந்த நெருக்குதலுக்கும் இந்தியா பணியாது' - உலக வர்த்தக அமைப்பிடம் பியூஷ் கோயல் பேசியதன் பின்னணி

உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் இன்று (ஜூன் 13) பேசிய இந்திய வர்த்தக – தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘யாருடைய நெருக்குதலுக்கும் இந்தியா அடிபணியாது. தன்னுடைய நாட்டு மக்களின் நலனை விட்டுத்தராது. தன்னிறைவு அடையும் லட்சியத்திலிருந்து பின்வாங்காது’ என்று உறுதிபடத் தெரிவித்தார். மூடிய அரங்குக்குள் நடைபெற்ற இந்தக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட!

இதில் உரையாற்றிய பியூஷ் கோயல், “உலகமெங்கும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏழை, நடுத்தரக் குடும்ப மக்கள் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளின் நிபந்தனைப்படி அமல்படுத்த முடியாது.

2013-ல் பாலி நகரில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பொதுப் பேரவை 2014-ல் விவாதித்து நிரந்தரத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அது இன்னமும் நிறைவேறாமல் தாமதமாகிக்கொண்டே வருகிறது. நாம் அடுத்த பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முன்னால், இதை முன்னுரிமை அடிப்படையில் விவாதித்துத் தீர்வு காண வேண்டும். உலக மக்களின் நலன் சார்ந்த இதைவிட வேறு அவசியமான வேலை எதுவும் இல்லை” என்றார்.

மேலும், “கோவிட்-19 பெருந்தொற்று பரவியபோது உலகின் பெரும்பாலான நாடுகளுக்குத் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவில்லை. புதிய தடுப்பூசி மருந்துகள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த உயிர்காக்கும் மருந்துகள், உடலுக்கு உரமேற்றும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் போன்றவற்றுக்குக்கூட பற்றாக்குறை ஏற்பட்டது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட உலக அமைப்புகளால் உதவ முடியவில்லை. உலகின் தொழில்வள நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துவிட்டு பிற நாடுகளைப் புறக்கணித்தன. பல வளர்ந்த நாடுகள் அந்த மருந்து, தடுப்பூசிகளிலும் வணிக நோக்கத்தைப் புகுத்தி லாபம் சம்பாதிக்கப் பார்த்தன. இதனால் ஏழை மக்களின் சுகாதார நலனைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து உலக வர்த்தக அமைப்பு பெரிதும் தவறிவிட்டது. ‘ஒரே உலகம் – ஒரே உடல் நலம்’ (ஒன் எர்த் – ஒன் ஹெல்த்) என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். உலக நாடுகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பூசிகளை எங்களுடைய நாடுதான் கோடிக்கணக்கில் தயாரித்து விரைந்து அனுப்பியது. பணக்கார நாடுகள் இதில் தாங்கள் செய்தது சரியா என்று ஆத்மபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார் பியூஷ் கோயல்.

ஜி-33 அமைச்சர்கள் கூட்டம்

இந்தோனேசியா ஆதரவில் ஜி-33 அமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதிலும் பியூஷ் கோயல் பங்கேற்றார். நாங்கள் ஏழை நாடுகளுக்காகவும் வளரும் நாடுகளுக்காகவும் குரல் கொடுக்கிறோம். எந்த விவகாரத்திலும் துயரங்களைச் சுமக்கும் நாடுகளாக அவைதான் இருக்கின்றன. உருகுவே ஒப்பந்தத்துக்குப் பிறகு, வளரும் நாடுகளுக்கு பலன்கள் குறைவாகவே கிடைக்கின்றன என்பதை பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார்.

பிறகு நிருபர்களிடம் பேசும்போது, “உணவுப் பொருள் கையிருப்பு, மீனளம், வேளாண்மை, தடுப்பூசி தொடர்பாக உலக வர்த்தக தலைமை இயக்குநர் ஓகோஞ்சோ-ஐவீலா, அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி காதரீன் தாய், தென்னாப்பிரிக்க வர்த்தக அமைச்சர் இப்ராஹிம் படேல் ஆகியோருடன் ஜெனீவாவில் பேசினோம். எந்த விஷயத்துக்காகவும் எந்த நாட்டின் நிர்பந்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். இன்றைய சூழலில் இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க எந்த நாட்டாலும் முடியாது. முக்கியமான எல்லாத் துறைகளிலும் தன்னிறைவுக்கான வழிகளை மேற்கொண்டுள்ள நாடு இந்தியா. எப்படிப்பட்ட சவால்களையும் சந்திக்கும் வல்லமை எங்களிடம் இருக்கிறது. இந்திய நலன் சார்ந்த எந்த முடிவையும், பிற நாடுகளின் நெருக்குதல்களுக்கு வளைந்து கொடுத்து எடுக்க மாட்டோம்.

மீன்பிடிப்பது இந்தியாவிலும் பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதில் ஈடுபடும் பரதவர்கள் காலங்காலமாக இத்தொழிலைச் செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலுக்கு அளித்துவரும் மானிய உதவிகளை நிறுத்துமாறு உலக வர்த்தக அமைப்பு வலியுறுத்தக் கூடாது. கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம். இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது அவர்களுடைய பசி – பட்டினியைப் போக்கிக்கொள்வதற்காக. அதன் மூலம் அவர்களுடைய வறுமை ஓரளவு நீங்குகிறது. மக்களுக்கு உணவும் ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. இதுதான மீன்பிடித் தொழிலால் மக்களுக்குக் கிடைக்கும் தொடர் பாதுகாப்பு. அவர்களுடைய வாழ்வுரிமையையும் தொழிலையும் புதிய நிபந்தனைகள் மூலம் கட்டுப்படுத்தக் கூடாது” என்று பியூஷ் கோயல் கூறினார்.

மேலும், “உலக அளவில் கடல்வாழ் உயிரினங்களை அதிகம் வேட்டையாடியதும் வியாபாரத்துக்காகப் பிடித்ததும் பணக்கார நாடுகள்தான். நவீனத் தொழில்நுட்பம், பெரிய பெரிய மீன்பிடிக் கப்பல்கள், வலைகள் உதவியுடன் டன் கணக்கில் பிடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்ததெல்லாம் பெரிய நாடுகள்தான். இதற்காக மீன்பிடி நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் மானியம் அளித்ததும் பணக்கார நாடுகள்தான். இப்போது அரிய கடல் வளம் வற்றி வருகிறது, மீன்பிடித் தொழிலுக்கு மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று வளரும் நாடுகளையும் ஏழை நாடுகளையும் நெருக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மீனளம் என்பது உலகத்தின் சொத்து. அதை எல்லா நாடுகளும் அவரவருக்குரிய அளவில் அனுபவிக்க வேண்டும். கடந்த காலங்களில் வியாபார நோக்கில் அழிக்கப்பட்ட அரிய கடல் வளங்கள் பற்றிய நினைப்போடு, எதிர்காலம் பற்றிய அக்கறையுடன் கொள்கைகளை வகுக்க வேண்டும். கடல் வளங்களையும் காக்க வேண்டும், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சமவிகித அக்கறையோடு கொள்கை வகுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்குமான பொறுப்புகளிலும் வேறுபாடு இருக்க வேண்டும்.

பட்டினியை ஒழிக்கவும் உணவுப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கவும் பாரம்பரியமான மீன்பிடித் தொழிலைத் தொடர அனுமதிக்க வேண்டும். வேளாண்மையில் வளர்ச்சி எப்படி முக்கியமோ, தொடர்ச்சி எப்படி அவசியமோ அப்படியே மீனளத்திலும் அவசியம். உருகுவே மாநாட்டில் வேளாண்மை, மீனளம் தொடர்பாக எடுத்த தவறான கொள்கை முடிவுகளை இனி மீண்டும் எடுக்காமல் தவிர்க்க வேண்டும்” என்றார் பியூஷ் கோயல்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in