இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்குக் கிடைக்கப்போகும் அந்தஸ்து: நற்செய்தி சொல்லும் மோர்கன் ஸ்டான்லி

இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்குக் கிடைக்கப்போகும் அந்தஸ்து: நற்செய்தி சொல்லும் மோர்கன் ஸ்டான்லி

முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் கொள்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றம், மக்கள்தொகை அதிகரிப்பின் நன்மைகள், அரசின் சார்பில் டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஆகியவற்றின் மூலம் 2027-ம் ஆண்டுவாக்கில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என கணித்திருக்கிறது அமெரிக்க நிதி சேவை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி!

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின், ஆசியப் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் சேத்தன் ஆஹ்யா ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளைப் பதிவுசெய்திருக்கிறார்.

அதன்படி, தற்போது, 3.4 ட்ரில்லியன் டாலராக இருக்கும் இந்தியாவின் ஜிடிபி இன்னும் 10 ஆண்டுகளில் 8.5 ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கும் என அவர் கணித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், 400 பில்லியன் டாலர் இந்தியாவின் ஜிடிபியில் சேரும் என்றும், அமெரிக்கா மற்றும் சீனாவைத் தவிர வேறு நாடுகளால் இதைச் சாதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அரசின் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்று அவர் கணிக்கிறார். ஜிஎஸ்டி மூலம் கொண்டுவரப்பட்ட வரி சீர்திருத்தம், கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு, உற்பத்தியின் அடிப்படையில் ஊக்கத்தொகையைக் கொண்டுவந்தது ஆகியவற்றை அரசின் கொள்கை மாற்றங்களில் முக்கியமானவை என்பது அவரது கருத்து.

சர்வதேச அளவில் தங்கள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த நினைக்கும் நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய நாடாக இந்தியா இருப்பதாகக் கூறும் அவர், “1991 முதல், இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 3 ட்ரில்லியன் டாலராக உயர 31 ஆண்டுகள் ஆனது. எங்கள் கணிப்பின்படி, அடுத்த 7 ஆண்டுகளிலேயே கூடுதலாக 3 ட்ரில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா அடைந்துவிடும்” என்கிறார்.

ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறித்தும் சாதகமான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார் சேத்தன் ஆஹ்யா. ஆதார் மூலம் டிஜிட்டல் கட்டமைப்பை அரசே உருவாக்கியிருப்பதாகவும், பிற நாடுகள் தனியார் மூலம்தான் அதைச் செய்திருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம், இந்தியாவின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது அவரது கணிப்பு.

ஜிடிபி மற்றும் மக்கள்தொகை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட்டிருக்கும் அவர், 2007-ம் ஆண்டில் சீனா பெற்றிருந்த ஜிடிபி மதிப்பைத்தான் இந்தியா தற்போது பெற்றிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேசமயம், பணி செய்யும் வயதுடையவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவருவதால், நீண்டகால வளர்ச்சி சாத்தியம் என்று கூறியிருக்கிறார். சராசரி வயதின் அடிப்படையில் சீனாவை ஒப்பிட இந்தியா 11 ஆண்டுகள் இளமையானது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உற்பத்தி வளர்ச்சியிலும் சீனாவைவிட இந்தியாவே நல்ல நிலையில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி சராசரியாக 6.5 சதவீதம் இருக்கும் என்றும், சீனாவின் வளர்ச்சி 3.6 சதவீதம் எனும் அளவில்தான் இருக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

இந்த அம்சங்களின் அடிப்படையில், 2027-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சூழல்களின் அடிப்படையில் இவற்றைக் கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் சேத்தன் ஆஹ்யா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in