
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல மளமளவென சரிந்தது. இதனால் நியூசிலாந்து 108 ரன்களில் சுருண்டது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் டக் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து கான்வே, நிக்கோல்ஸ், மிட்செல் லாதம் ஆகியோரும் அடுத்தடுத்து ஒன்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ் மற்றும் சாண்ட்னர் மட்டும் சற்று நிலைத்து ஆடினர். பிலிப்ஸின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் எடுத்தவுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால் 34.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் 36 ரன்களையும், சாண்ட்னர் 27 ரன்களையும் எடுத்தனர். 109 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா ஆடவுள்ளது.