லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று மதியம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 3.4வது ஓவரிலேயே முகமது சிராஜின் பந்தில் டக் அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலிய அணி கடும் அதிர்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் ஷர்துல் தாக்கூர் பந்தில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து லபுஷேன் 26 பந்துகளில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா குறைவான ரன்ரேட்டில் தத்தளித்தது.
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் வெற்றிக் கூட்டணி அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு பலமூட்டினார்கள். ஹெட் டி20 போட்டிகளைப்போல பந்துகளை நாலா புறமும் தெறிக்கவிட்டார். அதே நேரத்தில் ஸ்மித் பொறுமையாக பொறுப்பாக ஆடினார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 361 ஆக உயர்ந்தபோது ஹெட், சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 174 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 163 ரன்கள் குவித்திருந்தார். அதனைத் தொடந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ஸ்மித்தும் 268 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 121.3 ஓவர்களை எதிர்க்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.