2024 டிசம்பரில் இந்தியாவில் 100% 5ஜி கவரேஜ் கிடைக்கும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தற்போது 387 நகரங்களுக்கு 5ஜி சேவை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்தியாவில் முதல் கட்டமாக இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 200 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 5ஜி கவரேஜை அடையும் என்று நாங்கள் உறுதியளித்தோம். இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 387 மாவட்டங்களில் 5 ஜி சேவை கிடைத்துள்ளது. தற்போது இருக்கும் வேகத்தில் சென்றால், 2024 டிசம்பரில் இந்தியாவில் 100 சதவீதம் 5ஜி கவரேஜ் இருக்கும்" என்று கூறினார்.
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் ஆபரேட்டர்கள் 387 மாவட்டங்களில் 1,00,000 பேஸ் டிரான்ஸ்ஸீவர்களுடன் 5ஜியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
இரண்டு டெலிகாம் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான எளிதான அனுமதிகள் ஆகியவை காரணமாக 5G கவரேஜின் வேகம் அதிகரித்துள்ளது. இதுபற்றிப் பேசிய அமைச்சர் வைஷ்ணவ், “இப்போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் 85% உடனடியாக நடக்கின்றன. இப்போது தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளை அனுமதிப்பதற்கான சராசரி கால அளவு 7 நாட்கள் ஆகும், இது முன்பு 200 நாட்களாக இருந்தது” என்று கூறினார்.