ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்குக் கரோனா: ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு

3.63 கோடியானது தொற்றுகளின் எண்ணிக்கை
ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்குக் கரோனா: ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 3.63 கோடியாக அதிகரித்திருக்கிறது. 84,825 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குணமாகும் விகிதம் 95.59 ஆகப் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினசரி தொற்று விகிதம் 13.11 சதவீதமாகவும், வாராந்திர தொற்று விகிதம் 10.80 சதவீதமாகவும் பதிவாகியிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் மட்டும் 46,723 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய நாளைவிட 27 சதவீதம் அதிகம்.

கேரளத்தில் டெல்டா பரவல்

கேரளத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு புதிய தொற்றுகளின் எண்ணிக்கை, 10,000-ஐக் கடந்திருக்கிறது. நேற்று மட்டும் 12,742 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். டெல்டா பரவல்தான் கேரளத்தில் கரோனா தொற்று அதிகரிக்க முக்கியக் காரணம் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

5,488 பேருக்கு ஒமைக்ரான்

நாட்டில் ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 5,488 ஆக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் மட்டும் 86 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 1,367 ஆக அதிகரித்திருக்கிறது. ராஜஸ்தானில் 792 பேருக்கும், டெல்லியில் 549 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 294 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 275 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை 154.61 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், கரோனா நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வழியாக ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.