
உக்ரைன்-ரஷ்யா இடையிலான மோதலை இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகவும், எந்த அமைதி முயற்சிக்கும் பங்களிக்க தயாராக இருப்பதாகவும், இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கால்ஸுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கால்ஸ் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் வந்து உள்ளனர். இந்த பயணத்தின்போது ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸுக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகள் மற்றும் உக்ரைன் மோதல் உட்பட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வன்முறையைப் பயன்படுத்தி எல்லைகளை யாராலும் மாற்ற முடியாது. உக்ரைனில் நடந்த போர் மிகப்பெரிய இழப்பு மற்றும் அழிவுக்கு வழிவகுத்தது, இது ஒரு பேரழிவு என்று ஸ்கால்ஸ் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது அறிக்கையில், “உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்து, ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. எந்தவொரு அமைதி நடவடிக்கையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மோதலின் தாக்கம் உலகம் முழுவதிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக வளரும் நாடுகள் அதனால் தத்தளிக்கிறது.
பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே தீவிர ஒத்துழைப்பு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை அவசியம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மைக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக அமையும். ஐரோப்பாவில் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருப்பதுடன், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய ஆதாரமாக ஜெர்மனி உள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
இரண்டு பெரிய ஜனநாயகப் பொருளாதாரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்தியா மற்றும் ஜெர்மனி மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமல்ல, இன்றைய மன அழுத்தம் நிறைந்த உலகில் ஒரு நேர்மறையான செய்தியையும் அனுப்புகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.