பறந்த சிக்சர், பவுண்டரிகள்: 51 பந்தில் 112 ரன்கள் விளாசி இலங்கை வீரர்களை தெறிக்கவிட்ட சூர்யகுமார்

பறந்த சிக்சர், பவுண்டரிகள்: 51 பந்தில் 112 ரன்கள் விளாசி இலங்கை வீரர்களை தெறிக்கவிட்ட சூர்யகுமார்

சூர்யகுமாரின் அதிரடி சதத்தால் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன. கோப்பை யாருக்கு என நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷனும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரர் இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராகுல் திரிபாதி களமிறங்கினார்.

அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் கில்லுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைந்தார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

மறுபுறம் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார். இதையடுத்து தொடரை கைப்பற்ற இலங்கை அணிக்கு 229 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

இலங்கை அணி தரப்பில் தில்சான் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், காசுன் ரஜிதா, வஹின்டு ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள் களமிறங்கினர். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 எடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in