‘சொல்வதெல்லாம் பொய்’ - ஐநாவில் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா!

‘சொல்வதெல்லாம் பொய்’ - ஐநாவில் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா!

ஐநா பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீஃப், “இந்தியாவுடன் அமைதியைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில், சட்டவிரோதமாக மக்கள்தொகையில் மாற்றம் செய்து அதை ஒரு இந்து பிரதேசமாக மாற்ற இந்தியா முயற்சிக்கிறது” என்று கூறியதுடன், காஷ்மீரிகளின் நிலத்தை அபரிக்க இந்தியா முயற்சிப்பதாகவும், போலி வாக்காளர்களைப் பதிவுசெய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

மேலும், “இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பிரச்சாரம், மோசமான இஸ்லாமோஃபோபியா (முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை) வெளிப்பாடு. இந்தியாவில் பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முஸ்லிம்கள் இலக்காகிறார்கள். ஹிஹாபுக்குத் தடை, மசூதிகள் மீது தாக்குதல்கள், இந்து கும்பல்கள் நடத்தும் கும்பல் கொலைகள் போன்றவற்றால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, சில தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்புக்கு அழைப்பு விடுத்திருப்பது என்னைக் கவலையடைய வைத்திருக்கிறது” என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடந்த ‘பதிலளிக்கும் உரிமை’ அமர்வில் இந்தியா பதிலடி கொடுத்ததுடன், சரமாரியான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தது. இந்தியாவின் சார்பில் பேசிய முதன்மைச் செயலாளர் மிஜிடோ வினிடோ, “பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது வருத்தத்துக்குரியது” என்றார். மேலும், “தனது சொந்த நாட்டில் நடக்கும் தவறான செயல்கள் குறித்து தெளிவற்ற முறையில் பேசிவிட்டு, இந்தியாவுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். அண்டை நாட்டுடன் அமைதியை விரும்புவதாகச் சொல்லும் ஒரு தேசம், ஒருபோதும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்காது. கொடூரமான மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்காது. சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால்தான், அவர்கள் அங்கு இருப்பதையே பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு நாடு, அண்டை நாடுகள் குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை ஏற்க முடியாது” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னரும் ஐநா பொதுச் சபைக் கூட்டங்களில் இந்தியா மீது பாகிஸ்தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது உண்டு. அந்தத் தருணங்களில் ‘பதிலளிக்கும் உரிமை’ அமர்வுகளைப் பயன்படுத்தி இந்தியா பதிலடி கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in