கடந்த ஆண்டில் மட்டும் 7 கேப்டன்கள்; இந்தியாவின் தவறுகளால் பாகிஸ்தான் மீண்டும் வெல்லும் - சீண்டும் முன்னாள் கேப்டன்

கடந்த ஆண்டில் மட்டும் 7 கேப்டன்கள்; இந்தியாவின் தவறுகளால் பாகிஸ்தான் மீண்டும் வெல்லும் - சீண்டும் முன்னாள் கேப்டன்

கடந்த ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏழு கேப்டன்கள் இருந்தனர். இது மிகவும் பொருத்தமற்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு அக்டோபர் 24 அன்று துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு முதல்முறையாக, ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆகஸ்ட் 28-ம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த ஆண்டு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியதன் மூலம், உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பாகிஸ்தான் பெற்றது.

இதனால், ஆகஸ்ட் கடைசியில் துபாயில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது. ஆனால் இந்திய அணி அடிக்கடி மாறும் கேப்டன்களால் சோர்வடைந்து உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் தனது யூடியூப் சேனலில் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “ பாபர் அசாமின் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவின் தொடர்ச்சியான கேப்டன்சி மாற்றங்களால் அவர்களால் சிறப்பாக பாகிஸ்தானை எதிர்கொள்ள முடியாது. வெற்றி தோல்வி என்பது வேறு. ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பாக இருப்பதாக நான் நினைக்கிறேன். டி20, ஒருநாள் அல்லது டெஸ்ட் என பாகிஸ்தான் அணியில் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால் இந்திய அணியில் ​​கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 கேப்டன்கள் இருந்தனர். இந்த சூழ்நிலை மிகவும் பொருத்தமற்றது.

கோலி இல்லை. ரோஹித் மற்றும் ராகுல் காயம் அடைந்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கேப்டனாக வந்தனர். ஷிகர் தவானும் கேப்டனாக வந்தார். இது போல பல கேப்டன்கள் மாறி மாறி வருவதால் அவர்கள் சிறந்த அணியை உருவாக்குவதில் சில சிக்கல்கள் இருக்கும். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர், இதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களால் சிறந்த 16-ஐ உருவாக்க முடியாது, மேலும் அவர்களில் சிறந்த 11- ஐ அமைப்பதில் கூட சிக்கல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடந்த ஆண்டு இந்தியாவின் தவறுகளால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த முறை இந்தியாவின் தவறுகளால் பாகிஸ்தான் மீண்டும் வெல்லும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in