உக்ரைன் விவகாரத்தில் அமைதியின் பக்கம் நிற்கிறோம்!

தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இந்தியா
உக்ரைன் விவகாரத்தில் அமைதியின் பக்கம் நிற்கிறோம்!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனின் புக்கா நகரில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய படுகொலைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அத்துடன், உக்ரைன் போரில் தனது நிலைப்பாடு குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறது.

உக்ரைன் விவகாரம் குறித்த விவாதத்தை, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்.பி-யான என்.கே.பிரேமசந்திரன், காங்கிரஸ் எம்.பி-யான மணீஷ் திவாரி ஆகியோர் நேற்று மக்களவையில் தொடங்கிவைத்தனர். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியினர் முதல், இந்திய மாணவர்களை மீட்டுவரும் பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள் வரை பலரும் பங்கேற்று பல தகவல்களை முன்வைத்தனர். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மக்களவையில் உரையாற்றினார்.

"இந்த விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கம் நிற்கிறது எனக் கேட்டால், அமைதியின் பக்கம் நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றே இந்தியா வலியுறுத்துகிறது. இதுதான் கொள்கை அடிப்படையிலான நமது நிலைப்பாடு. இதுதான் ஐநா உள்ளிட்ட சர்வதேச விவாதங்களில் நமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வழிநடத்திவருகிறது” என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புக்கா நகரில் 400-க்கும் மேற்பட்டோர் ரஷ்யப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது. அங்குள்ள தேவாலயம் அருகே 45 அடி நீளத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும் காட்சி அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் டெக்னாலஜி எனும் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியிருக்கிறது.

உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது. மக்களவையில் உரையாற்றிய ஜெய்சங்கர் இதுகுறித்து கூறும்போது, “புக்கா நகரில் நடைபெற்ற படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீனமான விசாரணை நடைபெற எழுந்திருக்கும் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையிலான பகை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறிய ஜெய்சங்கர், இந்தியா வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவிடம் இதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி

இதற்கிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி புக்கா படுகொலைகளைக் கண்டித்ததுடன், இது குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.