எல்லையில் உள்ள அனைத்து சவால்களையும் முறியடிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது: ராஜ்நாத் சிங்

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக எல்லையில் உள்ள சவால்களை முறியடிக்கும் அனைத்துத் திறனும் இந்தியாவிடம் இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாசல பிரதேசத்தில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) பாலம் திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “எல்லையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம். இந்தியா ஒருபோதும் போரை ஊக்குவிக்காத ஒரு நாடு. இந்தியா அண்டை நாடுகளுடன் எப்போதும் சுமுகமான உறவைப் பேண விரும்புகிறது. இது ராமரிடமிருந்தும், புத்தபெருமானின் போதனைகளிலிருந்தும் பெறப்பட்ட நமது தத்துவம். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அனைத்துத் திறனும் நாட்டிற்கு உள்ளது

எங்களுக்கு போரில் நம்பிக்கை இல்லை, ஆனால் அது எங்கள் மீது திணிக்கப்பட்டால், நாங்கள் போராடுவோம். அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் தேசம் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்வோம்" என்று கூறினார்.

மேலும், “புதிய பாலம் உள்ளூர் மக்களுக்கு எளிதில் செல்ல உதவுவது மட்டுமல்லாமல், துருப்புக்கள், கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட வாகனங்கள் முன்னோக்கிச் செல்வதற்கும் உதவும்" என்று அவர் கூறினார்.

மேற்கு சியாங் மற்றும் அப்பர் சியாங் மாவட்டங்களுக்கு இடையே ஆலோ-யிங்கியோங் சாலையில் 100 மீட்டர் 'கிளாஸ்-70' எஃகு வளைவு மேற்கட்டமைப்பு, எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 724.3 கோடி செலவில் எல்லை சாலை அமைப்பால் முடிக்கப்பட்ட 28 திட்டங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பின் மற்ற 27 திட்டங்களையும் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இவற்றில் எட்டு லடாக்கிலும், நான்கு ஜம்மு காஷ்மீரிலும், ஐந்து அருணாச்சல பிரதேசத்திலும், தலா மூன்று சிக்கிம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்டிலும், இரண்டு ராஜஸ்தானிலும் கட்டப்பட்டுள்ளன.

டிசம்பர் 9 அன்று அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டரில் இந்தியா மற்றும் சீனத் துருப்புக்கள் எல்லைப்பகுதியில் மோதிக்கொண்டன. இந்த மோதலின் விளைவாக "இரு தரப்பிலும் ஒரு சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன" என்று இராணுவம் கூறியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in