இந்தியாவிடமிருந்து பிரேசிலுக்கு கைமாறும் ஜி20 தலைமை
இந்தியாவிடமிருந்து பிரேசிலுக்கு கைமாறும் ஜி20 தலைமை

அடுத்த ஜி20 மாநாட்டுக்கு தலைமை பிரேசில்... பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி!

அடுத்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பு பிரேசில் தேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகார பரிமாற்றத்தினை, ஜி 20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி மேற்கொண்டார்.

ஜி20 நாடுகளின் மாநாட்டுக்கு நடப்பாண்டு இந்தியா தலைமை வகித்து நடத்திக் கொடுத்தது. இதற்காக கடந்த சில மாதங்களாக இந்தியாவின் 60 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிறைவாக உலகத் தலைவர்கள் பங்கேற்கும் 2023, ஜி20 உச்சி மாநாடு, நேற்று தொடங்கி 2 தினங்கள் நடைபெற்றது. டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் விவாதித்து புதிய முடிவுகள் எட்டப்பட்டன. நிறைவு நாளான இன்று மழையையும் பொருட்படுத்தாது ராஜகாட் பகுதியில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நிறைவு விழாவினை முன்னிட்டு, அடுத்த ஆண்டுக்கான ஜி 20 மாநாட்டுக்கு பிரேசில் தலைமை வகிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2023ம் ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் மாநாடு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

நடப்பாண்டு ஜி20 தலைமைக்கான இந்தியாவின் அவகாசம் டிசம்பவர் வரை இருப்பதால், நவம்பரில் 2023, ஜி20 ஆன்லைன் மாநாடு ஒன்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in