சொந்த மண்ணிலேயே மேற்கிந்திய தீவுகள் அணியை வொயிட்வாஷ் செய்தது இந்தியா: 3வது போட்டியிலும் அபார வெற்றி!

சொந்த மண்ணிலேயே மேற்கிந்திய தீவுகள் அணியை வொயிட்வாஷ் செய்தது இந்தியா: 3வது போட்டியிலும் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக அவர்களின் சொந்த மண்ணில் வொயிட்வாஷ் செய்து வரலாறு படைத்துள்ளது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3 ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா வென்றது. இந்த போட்டியில் 257 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அதன்பின்னர் ஹைடன் வால்ஷ் ஜூனியர் 58 ரன்களில் தவானை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை முடித்தார். இந்தியா 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. பிறகு தொடங்கிய ஆட்டத்தில் சுப்மான் கில் உடன் கூட்டணி அமைத்த ஸ்ரேயாஸ் ஐயரும் அடித்து ஆடினார், அவர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் ஒரு புறம் சரிந்தாலும் கில் பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் டிஎல்எஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சவாலான இலக்குடன் விளையாடத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2வது ஓவரிலேயே இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மளமளவென விக்கெட்டுகள் சரிந்தபடியே இருந்தன. இதனால் 26 ஓவர்களின் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பூரன் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் தலா 42 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணியின் சஹால் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்றாவது போட்டியிலும் இந்தியா வென்று சாதனைப் படைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in