சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எமனான `மழை': தொடரை கைப்பற்றியது இந்திய அணி

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எமனான `மழை': தொடரை கைப்பற்றியது இந்திய அணி

நியூசிலாந்து அணியை சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடந்த முதல் தொடக்க ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பின்னர் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி, நேப்பியரில் இன்று நடந்த கடைசி 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலென்-டெவான் கான்வே களமிறங்கினர். ஆரம்பமே நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆலென் 3 ரன்னிலும், அடுத்து வந்த சாம்ப்மேன் 12 ரன்னிலும் வெளியேறினர். இதையடுத்து, கான்வேயுடன் அதிரடி ஆட்டக்காரக் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. அபாரமாக விளையாடிய பிலிப்ஸ் 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வே அரைசதம் அடித்தார். கான்வே 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் 10 ரன்னிலும், நீஷம் ரன் எடுக்காமலும், சாண்ட்னெர் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 19.4 ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஷன் கிஷன் - பண்ட் களமிறங்கினர். 10 ரன்னில் கிஷனும், 11 ரன்னில் பண்ட்டும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சூர்யகுமார் 13 ரன்னிலும், ஷ்ரேயஸ் ஐயர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா- தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்று வந்தனர். இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. இந்திய அணி 75 ரன்களே எடுத்திருந்தது. இதனால் 3-வது டி20 போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கெனவே 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி தொடரை இழந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in