16-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலன்: படைகளைத் திரும்பப் பெறும் இந்தியா - சீனா!

16-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலன்: படைகளைத் திரும்பப் பெறும் இந்தியா - சீனா!

லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இந்தியா மற்றும் சீனாவின் படைகள் இன்று திரும்பப் பெறப்படுகின்றன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே ஜூலை மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன. அதில், ‘இந்தியா - சீனா கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவில் நடந்த சந்திப்பின் 16-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 2022 செப்டம்பர் 8-ல், கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் (பிபி-15) பகுதியில் இருந்து இந்திய மற்றும் சீனப் படைகள், ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட வழியில் திரும்பத் தொடங்கியிருக்கின்றன' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மிக முக்கியமான முற்றுகைப் பகுதி எனக் கருதப்படுகிறது.

இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் இதுகுறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். 16-வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஜூலை 17-ல் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பும் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தன. அந்தப் பகுதியில், 2020-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு சீனா திரும்பும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

2020 ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அப்பகுதியிலிருந்து இரு நாடுகளின் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் முன்பே தொடங்கிவிட்டன.

லடாக்கின் தெற்குப் பகுதியில் உள்ள பாங்காங் ஏரி பகுதியின் கரையில் இருந்த சீனப் படைகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. எனினும், லடாக்கின் வடக்குப் பகுதியில் தேப்சங் சமவெளிப் பகுதியில் இன்னமும் சீனப் படையினர் இந்தியாவுக்குச் சொந்தமான பெரும் பகுதியைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in