டி20 உலகக்கோப்பை போட்டியில் கடைசி பந்து வரை 'த்ரில்': 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை போட்டியில்  கடைசி பந்து வரை 'த்ரில்':  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவில் இன்று  நடைபெற்ற உலக கோப்பை டி20 போட்டியில்  பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

எட்டாவது டி20 உலக கோப்பை போட்டிகள்  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  இன்று மெல்போர்னில் நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதின. உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியை விட இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே  அதிக ஆர்வம் காணப்பட்டது.  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத்  தேர்வு செய்தது. 

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் (0) – முகமது ரிஸ்வான் (4) ஜோடி அர்ஷ்தீப் சிங் வேகத்தில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த இப்திகார் அகமது அதிரடியாக விளையாடினர். 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அரைசதம் விளாசினார். அவர் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஷமியின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் அடுத்தடுத்த விக்கெட் இழப்பு இருந்தாலும், மறுமுனையில் ஷான் மசூத் அவ்வப்போது பவுண்டரிகளை எல்லைக்கோட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார். 5 பவுண்டரிகளை அடித்த அவர் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி  எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது.   இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல், ரோகித் தலா 4 ரன்களில் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ், (15), அக்சர் படேல் (2) என 31 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் விராட் கோலி உடன் ஹர்த்திக் பாண்டியா கூட்டணி அமைத்தார். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.


கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பாண்டியா (40) அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (2) ரன்னில் ஏமாற்றினார். விராட் கோலி சிக்சர் அடித்து வெற்றிக்குப் போராட, கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 எடுத்து வெற்றிப் பெற்றது. விராட் கோலி 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in