சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிரடி அறிவிப்பு: ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிரடி அறிவிப்பு: ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, கையிருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடை செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாக கடல் சூழல் உட்பட நிலப்பரப்பு மற்றும் நீர்நிலை சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்படுவது உலகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பல நாடுகள் தடைசெய்து வருகின்றன.

ஜூலை 1 முதல் தடை செய்யப்படும் பொருட்களின் பட்டியல் இங்கே:

பிளாஸ்டிக் காது குடையும் குச்சிகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்கார தெர்மாகோல், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் முட்கரண்டி, கரண்டி, கத்திகள், உறிஞ்சு குழல்கள், ஸ்வீட் பாக்ஸ்கள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தடை செய்யப்படுகிறது.

தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் சட்டவிரோத உற்பத்தி, இறக்குமதி, கையிருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்க தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள் 2021ன் படி ஏற்கனவே 75 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரி பைகள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. 125 மைக்ரான் தடிமனுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் வரும் டிசம்பர் 31 முதல் தடைசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in