இந்தியா - ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தால் சீனாவின் ஆதிக்கம் குறையும்: தொழில்துறையினர் உற்சாகம்

இந்தியா - ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தால் சீனாவின் ஆதிக்கம் குறையும்: தொழில்துறையினர் உற்சாகம்

இந்தியா - ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக ஜவுளித்துறையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடியும், கல்விதுறையில் படிப்பு, வேலைவாய்ப்பு மேம்படும், தொழில்துறையில் ஜாப் ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் எனவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி அங்கீகரிக்கப்பட்டு டிசம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியவில் இறக்குமதி செய்யப்படும் ஆஸ்திரேலியாவின் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்திய ஆசிரியர்கள், சமையல் கலைஞர்கள் வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் மூலம் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி விசா மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இந்த ஒப்பந்தந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கம்பளி, ஆட்டுக் குட்டி, பார்லி, ஓட்ஸ், நண்டுகள், அழகு சாதனப் பொருட்கள், தாதுக்கள், இரும்பு, டைட்டானியம் டையாக்சைடு உள்ளிட்ட பல பொருட்களுக்கு 85 சதவீதத்திற்கும் மேலான வரிகள் நீக்கப்பட்டுள்ளது. நட்ஸ், வெண்ணெய், பெர்ரி, கடல் உணவுகள், மருந்துகள், கோக்லியர் இம்ப்லாண்ட்ஸ், வைட்டமின்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், காலை உணவு தானியங்கள், பாஸ்தா, சந்தன சிப்கள், பம்புகள் மற்றும் பில்லர்கள், இயந்திர பாகங்கள், சுரங்கம் சம்பந்தமான இயந்திரங்கள் என பலவற்றிற்கும் வரி படிப்படியாக குறைக்கப்பட உள்ளன. ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றுக்கு வரி சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாட்டு வணிகமும் 27 பில்லியன் டாலர்களில் இருந்து, 45 - 50 பில்லியன் டாலராக உயர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவசாய பொருட்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள், நகைகள், ஜவுளி, தோல், பர்னிச்சர் என பல்வேறு துறைகள் இந்த ஒப்பந்தத்தினால் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ‘‘ இந்த ஒப்பந்தம் மூலம் தொழில்கள் வளர்ச்சியடைந்தால் சந்தோஷம். அதே சமயம் ஆட்டோமொபைல் சாதனங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆவது மிகவும் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் குறைந்த விலையில் கிடைப்பதே. இந்தியாவில் ஜாப் ஆர்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலைகள் கிடைப்பது இல்லை. குறுந்தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கப்படாமல் விலை குறைய வாய்ப்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த ஒப்பந்தங்கள் மூலம் சிறு,குறுந்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்’’ என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது.., “கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக கோவை உள்ளது. உலக அளவில் கோவை பம்பு செட்கள் பெயர் பெற்றுள்ளன. வளைகுடா நாடுகளில் கோவை பம்புசெட்கள் தேவை அதிகரித்து வருகிறது. ஏற்றுமதியை எவ்வாறு எப்படி மேற்கொள்ள வேண்டும் என்கிற விவரம் பெரும்பாலும் எங்களை போன்ற சிறு நிறுவனங்களுக்கு தெரிவதில்லை. இந்தியா ஆஸ்திரேலியா ஒப்பந்தம் படி கோவையில் இருந்து பம்புசெட்களை ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யலாம். ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டு குழுக்களை அமைக்க வேண்டும். அவர்களை அனுகினால் பணம் செலுத்தி ஏற்றுமதி தொடர்பாக வகுப்புகளுக்கு வரசொல்கின்றனர். அதற்கு பதிலாக குழு அமைத்து எங்களை வழிநடத்தலாம்” என்று அவர் கூறினார்.

கல்வி துறையில் தமிழகம், இந்தியாவின் முக்கியான பகுதியாக கருத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் படிக்கச் செல்ல முடியும். அதே போல் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கும் மாணவர்கள் படிக்க வருவது அதிகரிக்கும். வேலைவாய்ப்பிற்காகவும் ஆஸ்திரேலியா செல்வதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் கூறுகையில், ‘‘ இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான வணிக வாய்ப்புகளை மேம்படுத்தும். இது தொழில்துறையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். இறுதியில் திறமைகளின் தேவை உயரும். இதனால் வேலைவாய்ப்புகள் மேம்படும்,’’ என்றார்.

திருப்பூரில் அண்மை காலமாக பல்வேறு காரணங்களினால் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இந்தியா ஆஸ்திரேலியா ஒப்பந்தம் மூலம் திருப்பூரில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்களும் அதை சார்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப் ஆர்டர்கள் நிறுவனங்களும் திருப்பூரில் உள்ளன. இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற நிறுவனங்கள் உள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் ஜவுளி நிறுவனங்கள் பெரிதளவில் பயன்பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன் கூறுகையில், ‘‘ ஆஸ்திரேலியா ஒரு வருடத்தில் சுமார் 6000 கோடி ரூபாய் அளவில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறது. இதில் சீனா ஏறத்தாழ 63 சதவீத சந்தையை வைத்துள்ளது. இந்தியா 5 சதவீதம் சந்தையை இதுவரை கைப்பற்றியுள்ளது. 7 மாதத்தில் சுமார் ரூ.1600 கோடி ரூபாய் வரையிலான ஆயத்த ஆடைகளை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் நமக்கு வரியில்லா சலுகை ஏற்றுமதிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் சீனாவிடம் ஆடைகளை வாங்குவதை குறைத்து வேறு நாடுகளில் வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் அங்கு நிலவுவதால், நமது தமிழக ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர் முயற்சி எடுத்தால் தற்போதுள்ள ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடியும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in