
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களில் சுருண்டுள்ளது. முகமது ஷமி மற்றும் சிராஜ் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இந்தியா பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஆனாலும் மறுபுறம் ஹெட் 5 ரன்களிலும், ஸ்மித் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மார்ஷின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நம்பிக்கையுடன் இருந்தது. ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 129ரன்கள் எடுத்திருந்தபோது, 65 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்திருந்த மார்ஷ் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆஸ்திரேலியா 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.